மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது திமுக ஓ பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு தி.மு.க நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது என்று கோவையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்
கோவை
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு தி.மு.க நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது என்று கோவையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்
பிரசார பொதுக்கூட்டம்
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனியில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக இருந்து வருகிறது. கோவை வ.உ.சி திடலில் 2011-ல் முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா நடத்திய பிரமாண்டமான கூட்டம், அ.தி.மு.க 10 ஆண்டுகாலம் ஆட்சி அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது.
மக்கள் நல திட்டங்கள்
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் எண்ணங்களை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா. அவர் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர், 5.5 லட்சம் வீடுகளை மக்களுக்கு கட்டிகொடுத்தவர். இந்த திட்டங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாதவையாக இருக்கிறது.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தடம் பிறழாமல் அவரை தொடர்ந்து செய்து காட்டியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு.
தமிழகத்தில் 52 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வித்திட்ட வர் ஜெயலலிதா.
கொரொனா தொற்றை அ.தி.முக அரசு சிறப்பாக கையாண்டது. ஆனால் தி.மு.க அரசு அதை சரியாக கையாளவில்லை.
நம்பிக்கை துரோகம்
சட்டசபை தேர்தலின்போது தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தது. 505 வாக்குறுதிகளை தி.மு.க வீதி வீதியாக பிரசாரம் செய்தது. அதை மக்கள் நம்பினார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த கட்சி தி.மு.க.
ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வை நீக்குவோம் என்றார்கள். இன்னும் செய்யவில்லை. 5 பவுனுக்குள் நகை அடகு வைத்தால் கடன் தள்ளுபடி என்றார்கள், 50 லட்சம் பேர் நகை அடகு வைத்தனர். இப்போது கடனை தள்ளுபடி செய்ய யாருக்கு தகுதி என ஆய்வு செய்து வருகின்றனர். 13 லட்சம் பேர் மட்டும் இப்போது தகுதி என்கின்றனர்.
மக்கள் கோபம்
பெண்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகை கொடுக்கவில்லை. 2,500 ரூபாயுடன் பரிசு தொகுப்பை அ.தி.முக அரசு கொடுத்தது. அப்போது மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். இப்போது அவர் எதுவும் கொடுக்கவில்லை.
பொங்கல் பரிசு பெருட்களை இங்கு வாங்கினால் தெரிந்து விடும் என வட மாநிலத்தில் வாங்கி இருக்கின்றனர். பொங்கல் பரிசு பொருட்களின் தரம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை செய்ததில் அது உண்மை என நிரூபணம் ஆகியிருக்கிறது.
தயாராக இருக்கிறார்கள்
உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அ.தி.மு.க கைப்பற்றும். அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட சாதனையையும், தி.மு.க. ஆட்சியில் படும் சோதனையையும் மக்கள் பிரித்து பார்க்க தொடங்கி விட்டனர். அதில் அ.தி.முக ஆட்சிதான் சிறந்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்.
நமக்கு ஏற்பட்ட சின்ன சரிவால் வெற்றி வாய்ப்பை இழந்தோம், இப்போது இயற்கையே அதை சரி செய்துவிட்டது. தமிழகத்தில் ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கிறது, மக்கள் நம்மை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க. கைப்பற்றும்
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத பல திட்டங்களை கடந்த ஆட்சியில் செய்தோம். ஆனால் இந்த 9 மாதத்தில் புதிய அரசு வந்த பின் எந்த பணியும் நடைபெற வில்லை. கோவை மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் எந்த பணியும் நடைபெற வில்லை. விளம்பரத்தால் மட்டும் இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை இந்த அரசு முடக்கி இருக்கிறது. கண்டிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து பதவிகளையும் பிடிப்போம். பழைய வழக்குகளை தூசு தட்டி எடுத்து அ.தி.மு.க.வினரை காவல் துறையினர் மிரட்டுகின்றனர். எனவே மீண்டும் சட்டசபைக்கு தேர்தல் வந்தால் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ.க்கள்
கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






