வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது


வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 11 Feb 2022 10:49 PM IST (Updated: 11 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் நகை, பணம் மற்றும் சான்றிதழ்கள் கருகின.

வால்பாறை

வால்பாறை  தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் நகை, பணம் மற்றும் சான்றிதழ்கள் கருகின. 

வீட்டில் தீப்பிடித்தது

வால்பாறையில் இருந்து  குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்கு செல்லும் வழியில் செங்குத்துபாறை எஸ்டேட் உள்ளது. இங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் உள்ளன. 

இந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த பார்வதியம்மாள் என்பவரின் வீட்டின் மேல்கூரையில் இருந்து புகை வருவதை பார்த்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். 

அதற்குள் தீ மளமளவென பிடித்து கொழுந்து  விட்டு எரிந்தது. இந்த தீ மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் தொழிலாளர்கள் செய்வது அறியாமல் தவித்தனர். 

நகை-பணம் எரிந்தது

மேலும் இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த தீ விபத்தில் பார்வதியம்மாள், சிவகாமி, ஜோதிவேல் ஆகிய தொழிலாளர்களின் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. அத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த நகை, பணம், பள்ளி சான்றிதழ்கள், துணிகள், வங்கி புத்தகங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் கருகி நாசமானது. 

தேவையான உதவிகள்

இது குறித்து தகவல் அறிந்த வால்பாறை தாசில்தார் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். அத்துடன் தீயில் கருகிய சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகத்தினர் மாற்று வீடுகள் உட்பட உதவிகளையும் செய்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தீத்தடுப்பு உபகரணங்கள்

வால்பாறை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான எஸ்டேட் குடியிருப்புகள் உள்ளன. அங்கு தீப்பிடிக்கும்போது வால்பாறையில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் சேதம் அதிகமாகி விடுகிறது. 

இதை தடுக்க ஒவ்வொரு எஸ்டேட் நிர்வாகமும் தீ தடுப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 


Next Story