ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
பொள்ளாச்சி
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த நிலையில் குண்டம் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. வருகிற 19- ந்தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார்.
மயான பூஜை
கூட்டத்தில் மயான பூஜை, குண்டம் திருவிழா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வாகன நிறுத்த போதிய இடம் ஒதுக்க வேண்டும். திங்கட்கிழமை இரவு மயான பூஜையன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஒரு தீயணைப்பு வாகனம் தேவையான தீயணைப்பு வீரர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
17-ந் தேதி குண்டம் திருவிழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். சுகாதார வசதிகள், குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் குறிப்பாக கொசு மருந்து அடிக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆற்றுப்பாதையில் இருந்து மயான பூஜை நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியை சுத்தப்படுத்த வேண்டும். இதேபோன்று மயான பூஜையையொட்டி இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை ஆம்புலன்சுடன் மருத்துவக்குழுவை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
குற்ற சம்பவங்களை தடுக்க தற்போது 200 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திருவிழாவையொட்டி கூடுதலாக 100 கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பொள்ளாச்சியில் இருந்து வேட்டைக்காரன்புதூர் செல்லும் வாகனங்கள் தாத்தூர் பிரிவு வழியாக திருப்பி விடப்படும்.
உடுமலை சாலையில் வரும் வாகனங்கள் ஆத்துப்பாலத்தில் நிறுத்தப்படும். பழைய பஸ் நிலையத்தில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story