‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 12 Feb 2022 6:58 PM IST (Updated: 12 Feb 2022 6:58 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகன ஓட்டிகள் அவதி

கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் பெட்ரோல் நிலையம் இல்லாததால், 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூருக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இல்லையெனில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிதிர்காடுக்கு செல்ல வேண்டியதாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே தேவர்சோலையில் பெட்ரோல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல்லா, தேவர்சோலை.

சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது

கோவை புரூக்பீல்டு சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு தண்ணீர் தேங்குவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹரிஹரன், ராம்நகர்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

ஆனைமலையில் மாசாணியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்சில் செல்ல மாணவ-மாணவிகள் உள்பட பயணிகள் வருகின்றனர். ஆனால் அங்கு நிழற்குடை இல்லை. இதனால் தரைப்பாலத்தில் உள்ள தடுப்புச்சுவரில் அமர்ந்து இருக்கின்றனர். இதனால் தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

செல்வி, ஆனைமலை.

குண்டும், குழியுமான சாலை

கோவை ரேஸ்கோர்ஸ் அரசு கலைக்கல்லூரி முன்பு இருந்து சுங்கம் இணைப்பு சாலை வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்புசாமி, கோவை.

பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காடம்பட்டி அருகே குமாரபாளையம் கிராமத்துக்கு கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து திருப்பூர்-குமாரபாளையம் செல்லும் 5 டி என்ற பஸ் தினமும் 3 முறை இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் குமாரபாளையத்தில் இருந்து சோமனூருக்கு சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று, அங்கிருந்து வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும். 

தங்கவேல், குமாரபாளையம்.

அடிப்படை வசதிகள் 

பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி குஞ்சிபாளையம் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அங்குள்ள மயான பகுதியில் குப்பைகள் குவிந்து உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முரளி, குஞ்சிபாளையம்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மலைப்பகுதியான வால்பாறைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பலர் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டே ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலசுப்ரமணியன், பொள்ளாச்சி.

மரக்கிளையை வெட்ட ேவண்டும்

ஊட்டி பன்சிட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உரிமம் பெற வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகளுக்கு இயக்கி காட்டும் இடத்துக்கு அருகில் ராட்சத மரத்தின் கிளை பாதி அளவில் முறிந்து அரைவட்ட அளவில் வளைந்து நிற்கிறது. அந்த கிளை எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் அபயாம் நிலவுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். எனவே அந்த மரக்கிளையை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், ஊட்டி.

தெருவிளக்கு வசதி

பந்தலூர் அருகே உள்ள அத்திசால் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி உள்ள அந்த பகுதியில்  போதிய தெருவிளக்கு வசதி இல்லை. ஏற்கனவே பொருத்தப்பட்ட சில தெருவிளக்குகளும் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் சிறுத்தைப்புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ராஜ்குமார், அத்திசால்.


Next Story