கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
பொள்ளாச்சி
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
லாரி சிறைப்பிடிப்பு
பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள தனியார் இடத்தில் கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி பழுதாகி நின்றது. மேலும் லாரியில் இருந்த மூட்டைகள் கீழே விழுந்தன. இந்த நிலையில் அந்த பகுதியில் கழிவுகள் கொட்டுவதாக தகவல் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டு லாரியை சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரில் இருந்து கழிவுகளை ஏற்றிக் கொண்டு தேனி மாவட்டம் வத்தலக்குண்டு பகுதிக்கு சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் லாரி டிரைவர் கொப்பரை தேங்காய் ஏற்ற செல்ல வேண்டிய இருப்பதால் வத்தலகுண்டு வரை செல்ல முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
போலீசார் அலட்சியம்
இதையடுத்து வேறு லாரியில் ஏற்றுவதற்கு புளியம்பட்டியில் உள்ள தனியார் இடத்திற்கு லாரியை கழிவுகளுடன் ஓட்டி வந்தது தெரியவந்தது. லாரியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளும் இருந்தன. மூட்டைகளில் சுமார் 10 டன் கழிவுகள் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஊராட்சி நிர்வாகத்தினரும் அங்கு விசாரணை நடத்தினர். மேலும் அருகில் பள்ளி, குடியிருப்புகள் உள்ளதால் கழிவுகளை கொட்டுவதற்கு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
தமிழக-கேரள எல்லையான கோபாலபுரம், நடுப்புணி, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம் சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே போலீசாருக்கு தெரியாமல் லாரி தமிழகத்திற்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
எனவே சோதனை சாவடிகளில் பணியில் அலட்சியமாக இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story