அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டால் வேடிக்கை பார்க்க மாட்டோம்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது என்றும், அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டால் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் கோவை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கோவை
தி.மு.க. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது என்றும், அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டால் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் கோவை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் அ.தி.முக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கொடிசியா மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் முதல்-அமைச்சராக இருந்த கால கட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினேன். மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று 9 மாத காலமாகியும், கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. தன்னைத்தானே புகழ்ந்து பேசும் இந்தியாவின் ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.
கலவர பூமியாக மாற்ற முயற்சி
அமைதியான கோவை பூமியை கலவர பூமியாக தி.மு.க.வினர் மாற்றி வருகின்றனர். 5 கட்சிக்கு போய்விட்டு அ.தி.மு.க.விலும், தி.மு.க.விலும் அமைச்சராக இருந்தவரை கோவைக்கு பொறுப்பாளரை போட்டு இருக்கிறார்கள். மின்தட்டுப்பாடுக்கு காரணம் அணில்தான் என சொல்லியவர் தான் அமைச்சர் செந்தில்பாலாஜி. மின்வெட்டை கேட்டால் மின்தடையை சொல்கிறார்.
கோவையில் அதிக தொழிற்சாலைகள் இருப்பதால் அ.தி.மு.க. ஆட்சியில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது அடிக்கடி மின்வெட்டால் தொழில் புரிபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மின்வெட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கி வருகிறோம்.
70 லாரிகளில் பரிசு பொருட்கள்
70 லாரிகளில் பரிசுபொருட்கள் கோவைக்கு வந்திறங்கி உள்ளது. பரிசு பொருட்கள் வந்த லாரியை கோவைப்புதூரில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் தடுத்து தட்டிக்கேட்டிருக்கிறார். ஆனால் இங்கு இருக்கிற போலீஸ் துணை கமிஷனர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல், தகவல் கொடுத்தவர் மீது வழக்கு போட்டு, நடவடிக்கை எடுத்துள்ளார்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிக்கு போலீசார் துணை போகின்றனர். காவல்துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக மாறியிருக்கிறது. மக்கள் அதற்கான தண்டனையை வழங்குவார்கள்.
நேரடியாக மோத முடியவில்லை
மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால் தி.மு.க. இப்படி நடந்துகொள்கிறது. தைரியம் இருந்தால் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் நேரடியாக மோத வேண்டும். அதை விடுத்து பொய் வழக்கு போட்டு மிரட்டினால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
அமைதியான இந்த மண்ணில் கலவரம் செய்யும் மற்ற மாவட்டகாரர்களை ஓட ஓட விரட்டுவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் சட்டத்திற்கு குந்தகம் விளைந்தால் சரி செய்ய தயாராக இருப்போம்.
வாக்குறுதிகள்
சட்டமன்ற தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வெளியிட்ட நீங்கள் என்ன செய்தீர்கள்? மக்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்த்துதான் வாக்களித்தார்கள். ஆனால் தி.மு.க. அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
பெண்களுக்கு ரூ.1000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்னு சொன்னாங்க, இதுவரை செய்யவில்லை. கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படவில்லை.
மு.க.ஸ்டாலின் நகை அணிந்த பெண்களை பார்த்து கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் அடகு வைத்திருப்பவர்களின் நகைக்கடன் ரத்து செய்யப்படும் என்றனர். தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என மற்றிக்கொண்டனர். 48 லட்சம்பேரில் 13 லட்சம் பேர் தகுதியானவர்களாம். 35 லட்சம் பேர் ஏமாற்றப்பட்டார்கள்.
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்?
2010 டிசம்பர் மாதம் மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தி.மு.க.வின் காந்தி செல்வன் சுகாதார இணை மந்திரியாக இருந்த போதுதான் நீட் கொண்டுவரப்பட்டது. நீட் குறித்து விவாதிக்க தயாரா? என்று மு.க.ஸ்டாலின் கேட்டார். நானும் தயார் என்றேன். மு.க.ஸ்டாலினிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. நீட் விவகாரம் தெடர்பாக விவாதிக்க எந்த இடத்திற்கு கூப்பிட்டாலும் வர தயார்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் தர்மமே வெல்லும் பொய்யை பேசி ஆட்சிக்கு வர வேண்டிய கட்சி அ.தி.மு.க. இல்லை. உழைத்து வெற்றி பெறுவோம். கோவை அ.தி.மு.கவின் கோட்டை என்பதை மீண்டும் நிருபிப்போம்.
தில்லுமுல்லு
தில்லு முல்லு முறைகேடு செய்து வெற்றி பெறுவோம் என தி.மு.க. நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியை தமிழகத்தில் இருந்து அகற்றப்பட அ.தி.மு.க.வினர் அனைவரும் உழைக்க வேண்டும்.கொள்ளை அடித்த பணத்தை வைத்துதான் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் அ.தி.மு.க. அரசு தான் கொண்டு வந்தது. நான் பெற்ற பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் பெயர் வைக்கிறார். பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்டம், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது கோவை மக்களுக்கு பல திட்டங்களை தந்துள்ளார். 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கோவை-அவினாசி ரோடு மேம்பாலம் அதற்கு சாட்சி.
மெட்ரோ ரெயில் திட்டம்
கோவைக்கு மெட்ரோ ெரயில் திட்டத்தை கொடுத்தது அ.தி.மு.க. அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.1500 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். வெற்றிக்கு உழைப்பு முக்கியம் அதை தொண்டர்கள் செய்ய வேண்டும.
7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டால் 541 ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக ஆக முடிந்தது என்றால் அதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். நல்ல திட்டங்களை தடுத்த தி.மு.க.விற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாடம் புகட்டி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களை அதிகளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி.வேலுமணி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-
உள்ளாட்சியில் சிறப்பான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியதால் 143 விருதுகளை பெற்றோம். மாநகராட்சியில் நம்முடைய மேயர் தான் கோவையில் இருக்க வேண்டும். நாங்கள் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வீடுதேடிச்சென்று கொடுத்தோம்.
அமைதி நகரமான கோவையை, கரூரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள். கலவர பூமியாக மாற்றினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்அர்ச்சுனன், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், சர்மிளா சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






