கோவையில் தங்கியுள்ள பிற மாவட்ட தி.மு.க.வினரை வெளியேற்ற வேண்டும்
கோவையில் கலவரம் ஏற்படுத்த முயற்சி நடப்பதால், இங்கு தங்கியுள்ள பிறமாவட்ட தி.மு.க. வினரை வெளியேற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.
கோவை
கோவையில் கலவரம் ஏற்படுத்த முயற்சி நடப்பதால், இங்கு தங்கியுள்ள பிறமாவட்ட தி.மு.க. வினரை வெளியேற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்து உள்ளார்.
கலவரம் ஏற்படுத்த முயற்சி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன் உள்ளிட்டோர் கோவை கலெக்டர் சமீரன் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கோவை மாவட்டத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறார்கள். சென்னை, கரூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ரவுடிகளை கொண்டு வந்து தி.மு.க.விற்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதுடன், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபட்டு வருகின்றனர்.
இதற்காக சிறையில் இருந்து சிலரை விடுதலை செய்து உள்ளனர். இவர்கள் நேற்று இரவு பொதுமக்கள் மற்றும் பிற கட்சியினரை தாக்கி உள்ளனர். இதில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவைக்கு 150 கண்டெய்னர்களில் பரிசு பொருட்கள் கொண்டு வந்து உள்ளனர். இதனை வெளிப்படையாக பல இடங்களில் வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். கோவை மாநகராட்சி 90-வது வார்டில் மேற்கண்ட வெளியூரை சேர்ந்த ரவுடிகள் மூலம் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பண வினியோகத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது புகார் கொடுத்த கட்சி செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் உள்பட 8 பேரை தரையில் அமரவைக்கப்பட்டு போலீசார் மிரட்டியுள்ளனர்.
பதற்றமான சூழ்நிலை
கோவையில் தற்போது தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படும் கரூர், சென்னை மற்றும் வெளிமாநில ரவுடிகளின் செயல்பாடுகளால், கோவையில் ஏற்கனவே ஏற்பட்ட மதக்கலவரத்தின் போது நிலவிய பதற்றமான மற்றும் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது.
தேர்தல் தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை கட்டுப்படுத்த வேண்டிய போலீசார், தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறது.
எனவே கோவையில் தங்கியிருக்கும் ரவுடிகளை கைது செய்வதுடன், பிற மாவட்ட தி.மு.க.வினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.வினரை துன்புறுத்திய போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story