கோவையில் குண்டு வெடிப்பு தின நினைவு சின்னம் அண்ணாமலை பேட்டி

பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் மேயரானால் கோவையில் குண்டு வெடிப்பு தின நினைவு சின்னம் அமைக்கபடும் என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை
பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் மேயரானால் கோவையில் குண்டு வெடிப்பு தின நினைவு சின்னம் அமைக்கபடும் என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
புஷ்பஞ்சலி
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு புஷ்பஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா, வானசி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டு பாரத மாத உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பா.ஜனதா அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இரவில் நோட்டீஸ் கொடுத்து விட்டு காலையில் கோவில்களை இடிக்கும் நிலை உள்ளது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து கரூர் முறையில் கோவையில் தி.மு.க. வாக்கு சேகரிக்கிறது.
மேலும் வாக்காளர்களுக்கு கொலுசு, அயன்பாக்ஸ் கொடுக்கும் திட்டத்தை தி.மு.க.வினர் இன்னும் சில நாட்களில் நிறைவேற்றுவார்கள்.
ஹிஜாப் விவகாரம்
தமிழக அரசு முழு பலத்தையும் பயன்படுத்தி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் உண்மையை மறைக்க முயற்சிக்கிறது. ஹிஜாப் விவகாரத்தை வைத்து அரசியல் நடக்கிறது. குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளை பெற இந்து மதம் குறித்து தவறாக சித்தரிக்கின்றனர்.
கோவை மாநகராட்சியில் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் மேயராகும் போது கோவையில் குண்டு வெடிப்பு தின நினைவு சின்னம் அமைக்கப்படும். முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார். மக்கள் கேள்விகளுக்கு பயந்து முதல்-அமைச்சர் நேரில் பிரசாரத்திற்கு வருவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேரூர் படித்துறை
இதேபோல் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்கதள் அமைப்பு சார்பில் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பேரூர் நொய்யல் படித்துறையில் நேற்று நடந்தது. இதில், இறந்து போனவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கூறி, திதி கொடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் மொட்டை அடித்தார்.இதில் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயல் தலைவர் சிவலிங்கம், துணைத்தலைவர் குனிசைபாபு, பேரூர் பகுதி பொறுப்பாளர் மவுனவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






