கோவை காந்திபுரத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு
கோவை குண்டு வெடிப்பு தினமான நேற்று காந்திபுரத்தில் மேம்பாலத்திற்கு அடியில் கிடந்த மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை
கோவை குண்டு வெடிப்பு தினமான நேற்று காந்திபுரத்தில் மேம்பாலத்திற்கு அடியில் கிடந்த மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குண்டு வெடிப்பு தினம்
கோவை மாநகரில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஆர்.எஸ்.புரம் உள்பட பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் இறந்ததுடன், ஏராளமானோர் காயமடைந்தனர்.
எனவே ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது வழக்கம்.
இதன்படி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் சூப்பிரண்டுகள், வெளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் நேற்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
குறிப்பாக உக்கடம், டவுன்ஹால், ஆத்துபாலம், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முக்கிய இடங்களில் வாகன சோதனையும் செய்யப்பட்டது.
தமிழக சிறப்பு அதிரடிப்படை, வெள்ளலூரில் உள்ள மத்திய அதிவிரைவுப்படை போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அசாம்பவிதங்கள் ஏற்பட்டால் கூட்டத்தை கலைக்கும் விதமாக கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம்,
தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம் ஆகியவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் சீருடை அணியாத போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மர்ம சூட்கேசால் பரபரப்பு
இந்த நிலையில் நேற்று காலை காந்திபுரம் மேம்பாலத்திற்கு அடியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. நீண்ட நேரமாக அதனை யாரும் எடுக்காததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சூட்கேசை சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் எந்த பொருட்களும் இன்றி காலியாக கிடந்தது.
இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். குண்டு வெடிப்பு தினமான நேற்று காலியாக கிடந்த மர்ம சூட்கேசால் காந்திபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story