பொள்ளாச்சியில் பரிசு பொருட்கள் வினியோகித்ததாக தி.மு.க.வை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை


பொள்ளாச்சியில் பரிசு பொருட்கள் வினியோகித்ததாக  தி.மு.க.வை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 15 Feb 2022 11:09 PM IST (Updated: 15 Feb 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி வடுகபாளையத்தில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகம் செய்ததாக தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை அ.தி.மு.க.வினர் பிடித்து கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வடுகபாளையத்தில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகம் செய்ததாக தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை அ.தி.மு.க.வினர் பிடித்து கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள்

பொள்ளாச்சி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட வடுகபாளையம் மாகாளியம்மன் கோவில் பகுதியில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதாக அ.தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்தது.

 இதை அறிந்த அ.தி.மு.க.வினர் மற்றும் பாலக்காடு ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் பரிசு பொருட்கள் வினியோகம் செய்த தி.மு.க.வினர் 3 பேரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினார்கள். 

இதற்கிடையில் அங்கு வந்த பொள்ளாச்சி மேற்கு போலீசாரிடம் தி.மு.க.வினர் 3 பேரையும் அ.தி.மு.க.வினர் ஒப்படைத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் போலீசார் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து, ஆட்டோவில் ஏற்றி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

3 பேரிடம் விசாரணை

மேலும் இதுதொடர்பாக அந்த வார்டு தி.மு.க. வேட்பாளர் உமாமகேஸ்வரியின் கணவர் சிவசாமி உள்பட 3 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். வழக்கமாக போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லும் போது போலீசாரின் வாகனத்தில் அழைத்து செல்வார்கள். 

ஆனால் போலீசாரின் வாகனத்தில் ஏறிய நபர்களை, அவர்களது சொந்த வாகனத்தில் வருமாறு அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு அங்கிருந்த அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

வடுகபாளையத்தில் பட்டப்பகலில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகம் செய்கின்றனர். இதுகுறித்து தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படையினர் மற்றும் போலீசாரிடம் கேட்டால் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கின்றனர். 

இப்படி மாற்றி, மாற்றி தகவல் சொல்கின்றனர். ஆனால் இதற்கு ஒரு தீர்வு காண யாரும் முன்வரவில்லை. யாரை கேட்டாலும் எனக்கு அதிகாரம் இல்லை என்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் நகரம் முழுவதும் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மனு

இதற்கிடையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நேற்று மாலை ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் பொள்ளாச்சி நகராட்சி 2 மற்றும் 20-வது வார்டில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு விதிமுறைகளை மீறி பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

 எனவே சட்டத்திற்கும், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக பரிசு பொருட்களை வழங்கிய தி.மு.க.வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story