போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்த மேலும் 5 பேர் கைது


போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்த மேலும் 5 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2022 11:08 PM IST (Updated: 16 Feb 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் 5 பேரை கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை

கோவையில் போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் 5 பேரை கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போலி நகைகளை அடகு வைத்து கடன்

கேரள மாநிலம் திருச்சூர் திருப்புனித்தராவை சேர்ந்த பவுலோஸ் என்பவரது மகன் ரெஜி (வயது 47). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை மாநகர் விளாங்குறிச்சி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். 

இந்தநிலையில் இவர் மற்றும் கோவை காந்திமாநகரை சேர்ந்த ஹேமமாலினி, மதன் குமார் ஆகியோர் சேர்ந்து சேரன்மாநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் 4 கிலோ போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 44 ஆயிரம் கடன் பெற்று உள்ளனர்.

போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றது குறித்து வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியனுக்கு தெரியவந்தது. இதையடுத்து மண்டல மேலாளர் சுப்பிரமணியன் கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

திடுக்கிடும் தகவல்

அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்த ரெஜியை குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 30-ந் தேதி கைது செய்தனர்.

 இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

கேரளாவை சேர்ந்த கிருஷ்ணகுமார், ரமேஷ் (34) ஆகியோர் மூலம் கோவை கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த பிமல் (24) என்பவர் ரெஜிக்கு அறிமுகமாகி உள்ளார்.அவர் மூலம்  தரம் குறைந்த தங்க கம்பிகளை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சீனிவாசன் (50) என்பவரிடம் கொடுத்து அதை மெருகேற்றி வளையல்களாக தயார் செய்துள்ளனர்.

மேலும் 5 பேர் கைது

அதைகோவை கணபதியைச் சேர்ந்த சிவக்குமார் (42) ஆகியோர் மூலம்  நகை மதிப்பீட்டாளர்களான தர்மலிங்கம், செல்வராஜ், வங்கி கிளை மேலாளர் பிரேம்குமார், உதவி மேலாளர் உஷா ஆகியோர் உதவியுடன் ரெஜி, ஹேமமாலினி, மதன்குமார் ஆகியோர் பெயரில் நகைகளை அடமானம் வைத்து ரூ.1 கோடியே 32 லட்சத்து 44 ஆயிரம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. 

மேலும் இந்த வழக்கில் சிவக்குமார், ரமேஷ், பிமல், சீனிவாசன் மற்றும் ஹேமமாலினி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story