திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தாயுடன் பலி


திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தாயுடன் பலி
x
தினத்தந்தி 16 Feb 2022 11:09 PM IST (Updated: 16 Feb 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தாயார் பரிதாபமாக இறந்தனர்.

போத்தனூர்

கோவை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தாயார் பரிதாபமாக இறந்தனர். புதுப்பெண் உள்பட 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதலர் தினத்தில் திருமணம்

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரசாத் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சுவாதி (24) என்பவருக்கும் இடையே காதலர் தினமான கடந்த 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. 

இதையடுத்து மணமக்கள் கோவை சுந்தராபுரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர். இதனிடையே வருகிற 19-ந் தேதி சுந்தராபுரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த மணமகன் வீட்டின் தரப்பில் திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மறுவீட்டு அழைப்புக்காக நேற்று காலை ஷியாம் பிரசாத், அவரது மனைவி சுவாதி, ஷியாம் பிரசாத்தின் தந்தை சவுடையன் (62), தாய் மஞ்சுளா ஆகிய 4 பேரும் ஒரு காரில் பொள்ளாச்சி வழியாக தேனி மாவட்டம் போடிக்கு சென்றனர். 

மற்றொரு காரில் அவர்களது உறவினர்கள் சென்றனர். ஷியாம் பிரசாத் கார் சுந்தராபுரம் சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் இடுபாடிகளில் சிக்கி ஷியாம்பிரசாத் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

புதுமாப்பிள்ளை சாவு

விபத்தை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காருக்குள் சிக்கிக்கொண்ட 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலத்த காயமடைந்த ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 படுகாயமடைந்த சவுடையன், மஞ்சுளா, சுவாதி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக இறந்தார்.

சவுடையன் மற்றும் சுவாதி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தால் கோவை-பொள்ளாச்சி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இறந்த ஷியாம் பிரசாத் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story