பொள்ளாச்சியில் பயணிகள் சாலை மறியல்
வால்பாறைக்கு செல்ல பஸ் வராததால் பொள்ளாச்சியில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
வால்பாறைக்கு செல்ல பஸ் வராததால் பொள்ளாச்சியில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பஸ் வரவில்லை
தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக வெளியூரில் வசிக்கும் வால்பாறை பொதுமக்கள் வாக்களிப்பதற்கு சொந்த ஊருக்கு செல்ல பொள்ளாச்சிக்கு வந்தனர். ஆனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர். குழந்தைகளுடன் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்ததால் கடும் அவதிப்பட்டனர்.
சாலை மறியல்
மேலும் சுமார் 4 மணி நேரமாக பஸ் வராததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பொள்ளாச்சி புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
நாங்கள் திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றோம். தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல பொள்ளாச்சிக்கு வந்தால் பஸ் இல்லை. அதிகாலை 4 மணியில் இருந்து பஸ்சுக்காக காத்திருக்கிறோம். ஒரே பஸ் மட்டும் தான் வந்தது. அந்த பஸ்சும் நிரம்பி விட்டது.
கூடுதல் கட்டணம்
வால்பாறை மலைப்பாதை 40 கொண்டை ஊசி வளைவை கொண்டது. இதனால் பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்ய முடியாது. தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள் சொந்த ஊருக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி கொடுப்பதில்லை.
தனியார் வாகனங்களில் ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் கேட்கின்றனர். இதே அரசு பஸ்களில் ரூ.64 தான் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. தனியார் வாகனங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. தற்போது மட்டுமல்ல தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் இதே நிலைமை தான் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story