பொள்ளாச்சி வால்பாறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


பொள்ளாச்சி வால்பாறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:49 PM IST (Updated: 20 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, வால்பாறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

36 வார்டுகளில் 151 பேர் போட்டி 

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் மொத்தம் 82 ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நடந்த நகராட்சி தேர்தலில் 151 பேர் போட்டியிட்டனர். 26 ஆயிரத்து 052 ஆண்கள், 27 ஆயிரத்து 622 பெண்கள் மற்றவர் ஒருவர் என மொத்தம் 53 ஆயிரத்து 675 வாக்குகள் பதிவாகின. இது மொத்த வாக்காளர்களில் 65.08 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவான மின்னணு எந்திரங்கள் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் தாணு மூர்த்தி தலைமையில் 7 மேஜைகளில் 6 சுற்றுகளாக நடக்க உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை வேட்பாளர்கள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
மொத்தமுள்ள வாக்காளர்களில் 28 ஆயிரத்து 806 பேர் வாக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. வாக்குப்பதிவு 75 சதவீதம் இருக்கும் என நினைத்த அதிகாரிகள் வாக்குப்பதிவு மிக குறைவாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான காரணம் குறித்தும் ஆய்வு நடத்தவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வேட்பாளர்கள், பொதுமக்கள், கட்சியினர் அறிந்துகொள்ள ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வால்பாறை நகராட்சி

வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 10 மண்டலங்களை கொண்ட 73 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் வாக்கு சாவடிகளில் இருந்து மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நள்ளிரவு 2.15 மணியளவில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்தனர். 
21 வார்டில் 73 வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல அலுவலர்கள் எடுத்து வரும் போது சக்தி எஸ்டேட், காடம்பாறை, பச்சைமலை, சேக்கல்முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக வனப்பணியாளர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்கு நின்று வால்பாறை பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். 

24 மணி நேரமும் கண்காணிப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் தேர்தல் பார்வையாளர் ஜமுனாதேவி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெங்கடாசலம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் 73 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமாரிடம் ஒப்புதல் பெற்ற பின் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பொறுத்திய தனியறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர் அறையை பூட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் சீல் வைத்தார். மேலும், அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டது. 
நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணும் பணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. 6 மேஜைகளில் 13 சுற்றுகலாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளூர் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் அதிவிரைவு போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Next Story