வால்பாறையில் 24,645 பேர் வாக்களிக்கவில்லை


வால்பாறையில் 24,645 பேர் வாக்களிக்கவில்லை
x
தினத்தந்தி 21 Feb 2022 10:01 PM IST (Updated: 21 Feb 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வால்பாறையில் 24,645 பேர் வாக்களிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வால்பாறையில் 24,645 பேர் வாக்களிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

மலைப்பிரதேசமான வால்பாறை நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இங்கு 58 ஆயிரத்து 708 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 28 ஆயிரத்து 761 ஆண்கள், 29 ஆயிரத்து 945 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் ஆகும். இந்த தேர்தலில் 16 ஆயிரத்து 363 ஆண்கள், 17 ஆயிரத்து 699 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 34 ஆயிரத்து 063 பேர் மட்டுமே வாக்களித்தனர். 

இது 58.02 சதவீதம் ஆகும். மீதமுள்ள 24 ஆயிரத்து 645 பேர் வாக்களிக்க வரவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு 64 சதவீத வாக்குப் பதிவு நடந்தது. 19 ஆயிரத்து 122 பேர் வாக்களிக்க வரவில்லை. இதன் மூலம் மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் குறைந்து வருவதை அறிய முடிகிறது.

அதிகாரிகள் ஆய்வு

கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் வாக்குப்பதிவு குறைவாக இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

வால்பாறைக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் வால்பாறையில் இருக்கிறார்களா? அல்லது வெளியூரில் இருக்கிறார்களா? என்று கணக்கெடுக்க வேண்டும். மேலும் வால்பாறையில் இருந்தால் வாக்களிக்க வராதது ஏன்?, ஏதேனும் சிரமம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

சிறப்பு வாக்குச்சாவடி

வால்பாறையை சேர்ந்த பலரும் கோவை, திருப்பூர், ஈரோடு, பல்லடம் போன்ற இடங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் வால்பாறை பகுதிக்கு வந்து வாக்களிப்பதற்கு சிரமம் இருக்கலாம். எனவே பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வால்பாறை பகுதி மக்களுக்கான சிறப்பு வாக்குச்சாவடி அமைத்தால் வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  மேலும் 100 சதவீத வாக்குப்பதிவை பெற போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story