தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 10 பேர் கைது


தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 10 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2022 10:02 PM IST (Updated: 21 Feb 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனைமலை

ஆனைமலையில் தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். 

தேங்காய் வியாபாரி

கோவை மாவட்டம் ஆனைமலை சரவணன் டாக்டர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பரமேஸ்வரன்(வயது 27). ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பகுதியில் தேங்காய்-பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். 

இந்த நிலையில் அதே குடியிருப்பில் வசிக்கும் பரமேஸ்வரனின் சகோதரி பரமேஸ்வரிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அகல்யா(25) என்பவருக்கும் இடையே குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. 

கொலை

இது தொடர்பாக அகல்யா மற்றும் அவரது தாயார் பானுமதி(48) ஆகியோரிடம் பரமேஸ்வரன் தட்டி கேட்க சென்றார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அகல்யாவின் கணவர் தமிழ் செல்வன்(32), உறவினர் ராகவேந்திரன்(24) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பரமேஸ்வரனை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் பரமேஸ்வரனை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து, ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தினர். 

10 பேர் கைது

பின்னர் பரமேஸ்வரனை கொலை செய்ததாக தமிழ் செல்வன், அகல்யா, பானுமதி, ராகவேந்திரன், கோகுல் குமார்(28), ஆண்டனி(29), ஸ்ரீஆகாஷ்(22), ராஜ்குமார்(23), மணிகண்டன்(23) மற்றும் கார்த்திகேயன்(20) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பரமேஸ்வரனை தாக்கியவர்கள் அவரது தந்தை மற்றும் தம்பி ஆகியோரையும் தாக்கியதாக தெரிகிறது. அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.



Next Story