கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வு
கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சுல்தான்பேட்டை
கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கறிக்கோழி உற்பத்தி
தமிழகத்தில் பல்லடம், உடுமலை, சுல்தான்பேட்டை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
இந்த கறிக்கோழிக்கு பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு(பி.சி சி.) மூலம் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 14-ந் தேதி கிலோ ரூ.100 ஆக இருந்த கறிக்கோழி(உயிருடன்) பண்ணை கொள்முதல் விலை படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கிலோ ரூ.112 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய தற்போது உற்பத்தியாளர்களுக்கு ரூ.92 முதல் ரூ.95 வரை செலவாகிறது. இந்தநிலையில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை(விற்பனை விலை) தொடர்ந்து உயர்ந்து வருவது உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விலை மேலும் உயரும்
சில்லறை கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.220 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆட்டு இறைச்சி விலையைவிட கோழி இறைச்சி விலை குறைவு என்பதால் அசைவ பிரியர்களின் பார்வை கோழி இறைச்சி மீது தொடர்ந்து திரும்பி வருகிறது. தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களுக்கு தேர்தல் களத்தில் துணை நின்ற கட்சியினர், நண்பர்கள், உறவினர்களுக்கு பிரியாணி உள்பட உணவு வகைகளை கொண்டு விருந்து வைக்க வாய்ப்பு உள்ளதால், கறிக்கோழி தேவை அதிகரித்து மேலும் கொள்முதல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story