‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பாக பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
கோவை சாய்பாபாகாலனிகிரி நகர் பகுதியில் இருந்து கோவில்மேடு செல்லும் வழியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதி அடைகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.
செல்வம், கோவை
குடிநீர் வசதி
வால்பாறை நகரில் உள்ள காந்தி சிலை நிறுத்தம், அனைத்து பகுதி பயணிகளும் வந்து செல்லக்கூடிய இடமாகும். இந்த இடத்தில் பயணிகள் பயன்படுத்தி கொள்ள குடிநீர் வசதி இல்லை. எனவே சுத்திகரிக்கப்பட்ட சூடான குடிநீர் மற்றும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரங்கநாதன், எம்.ஜி.ஆர். நகர், வால்பாறை.
போக்குவரத்து நெரிசல்
கோவை திருச்சி சாலையில் குளத்தேரி அருகே தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் வகுப்பு முடிந்ததும் வீடுகளுக்கு செல்லும்போதும், பள்ளிக்கு வரும்போதும் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம், அந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து இருப்பதே ஆகும். எனவே மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லக் ஷிதா மயில்சாமி, சிங்காநல்லூர்.
பஸ்கள் நின்று செல்லுமா?
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு திருப்பூரில் இருந்து உடுமலைக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சில நின்று பயணிகளை ஏற்றிச்செல்வதில்லை. இதன் காரணமாக உடுமலை மற்றும் பல்லடம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பலர் சரியான நேரத்திற்கு வகுப்புக்கு செல்ல முடிவதில்லை. இந்த பிரச்சினைக்கு போக்குவரத்து அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
கண்ணன், சுல்தான்பேட்டை.
குடிநீர் தட்டுப்பாடு
கோவை அருகே பாப்பம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீருக்காக நீண்ட தொலைவிற்கு அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே அங்கு குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஜினி செந்தில், பாப்பம்பட்டி.
பூங்கா பராமரிக்கப்படுமா?
கோவை சாய்பாபா காலனி கணபதி லே அவுட் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள நாற்காலிகள் உடைந்து காணப்படுகின்றன. மேலும் பூங்காவின் நுழைவு வாயிலில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த இடமே அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அங்கு செல்லவே பொதுமக்கள் விரும்புவது இல்ைல. எனவே பூங்காவை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ராம்குமார், சாய்பாபா காலனி.
ஒளிராத தெருவிளக்குகள்
கோவை சேரன் மாநகர் மகாலட்சுமி கார்டன் பேஸ்-2 பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதியே இரவில் இருளில் மூழ்கி விடுகிறது. இதன் காரணமாக திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு ஒளிராத தெருவிளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனியப்பன், சேரன்மாநகர்.
தொற்று நோய் பரவும் அபாயம்
கோவை கணபதி டெக்ஸ் டூல் பாலத்தில் இருந்து இறங்கி காந்திபுரம் மேம்பாலத்தில் ஏறும் பகுதியில் இடதுபுறம் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே மேம்பாலத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வி, காந்திபுரம்.
மழைக்காலங்களில் அவதி
கோவை திருச்சி சாலை கிருஷ்ணா காலனியில் உள்ள சாலை பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் பள்ளங்கள் விழுந்து உள்ளன. இதனால் அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் கடும் அவதிப்பட நேரிடுகிறது. எனவே அந்த சாலையில் பள்ளங்களை சரி செய்து, சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
ராஜா, கோவை.
காத்திருக்கும் பயணிகள்
கோவை காந்திபுரத்தில் இருந்து கணபதி, பாரதி நகர், வ.உ.சி. நகர் வழியாக காந்தி மாநகர், கணபதி மாநகருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பஸ்கள் செல்கிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ச்சியாக வருவதால், மற்ற நேரத்தில் பயணிகள் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அந்த பஸ்கள் இயக்கப்படும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும்.
விஜய், கணபதி மாநகர்.
Related Tags :
Next Story