காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு

பொள்ளாச்சி பகுதியில் கடைகளில் நடத்திய ஆய்வுக்கு பிறகு காலாவதியான குளிர்பான பாட்டில்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் கடைகளில் நடத்திய ஆய்வுக்கு பிறகு காலாவதியான குளிர்பான பாட்டில்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
கடைகளில் ஆய்வு
பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகமாக தர்பூசணி உள்பட பழங்களை சாப்பிடுகின்றனர். மேலும் ஜூஸ் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக விரும்பி குடிக்கின்றனர். இந்த நிலையில் கடைகளில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் மேற்பார்வையில் பொள்ளாச்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சுப்புராஜ், வேலுசாமி, காளிமுத்து ஆகியோர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலாவதியான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கலப்பட டீத்தூள்
கோடைகாலத்தையொட்டி கடைகளில் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் சிலர் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. 169 லிட்டர் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதேபோன்று 12 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் கடைகளில் குளிர்பானங்கள் மற்றும் பொருட்களை வாங்கும் போது காலாவதியாகி உள்ளதா? என்று பார்த்து வாங்க வேண்டும். காலாவதியான, கலப்பட பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story