லாரி மோதி பாலக்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் பலி

லாரி மோதி பாலக்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் பலி
போத்தனூர்
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 53). இவர் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். தற்போது, சென்னை அடையாறில் உள்ள ராணுவ பயிற்சி தளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்காக விடுமுறை எடுத்து கேரளாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் சிவக்குமார் நேற்று காலை தனது மகன் சரணுடன் கோவையில் உள்ள தனியார் கண் சிகிச்சை மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அங்கு சிகிச்சை முடிந்ததும், ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பொருட்கள் வாங்கிக்கொண்டு பாலக்காடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சரண் ஓட்டிச்சென்றார்.
இவர்கள் மதுக்கரை மரப்பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி வேகத்தடை வந்ததால் திடீரென பிரேக் போட்டு வலது புறமாக திரும்பியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் லாரி மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட சிவக்குமார் லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சரண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் விரைந்து வந்து ராணுவ வீரரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story