தீபாவளி சீட்டு நடத்தி ரூ.37 லட்சம் சுருட்டிய மோசடிப்பெண் கைது


தீபாவளி சீட்டு நடத்தி ரூ.37 லட்சம் சுருட்டிய மோசடிப்பெண் கைது
x
தினத்தந்தி 24 Feb 2022 3:14 PM IST (Updated: 24 Feb 2022 3:14 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.37 லட்சம் சுருட்டிய மோசடிப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை தண்டையார்பேட்டை, திருவள்ளுவர் நகரைச்சேர்ந்தவர் சண்முகசுந்தரி (வயது 49). இவர் தனது கணவர் மோகன், தங்கை தேவி ஆகியோருடன் இணைந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக தெரிகிறது. ஒரு வருடம் பணம் கட்டினால், அந்த பணத்துடன் தங்க நகை, பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கப்படும் என்று சண்முகசுந்தரி விளம்பரப்படுத்தி உள்ளார். இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் பணம் கட்டி உள்ளனர்.

உரிய அனுமதி ஏதும் பெறாமல் சீட்டு நடத்தி வந்த சண்முகசுந்தரி பணம் கட்டியவர்களிடம் ரூ.37 லட்சத்தை சுருட்டி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தலைமறைவான சண்முகசுந்தரி நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story