திருவள்ளூரில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்; கீழே இறங்கும்படி டிரைவர் கூறியதற்கு எதிர்ப்பு


திருவள்ளூரில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்; கீழே இறங்கும்படி டிரைவர் கூறியதற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 5:57 PM IST (Updated: 25 Feb 2022 5:57 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்ததால் டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தி மாணவர்களை கீழே இறங்கும்படி டிரைவர் கூறியதால் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

பஸ்சை நிறுத்தினார்

திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் திருவள்ளூர் பஸ் நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருவள்ளூரில் இருந்து அரசு பஸ் ஒன்று சீயஞ்சேரி செல்ல தயாராக இருந்தது. ஆனால் பஸ் நிலையத்திலேயே கூட்டம் அதிகமாக இருந்தது.

அப்போது திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் அந்த பஸ்சில் ஏறினார்கள். அந்த பஸ் திருவள்ளூர் ஈக்காடு சந்திப்பு சாலையில் வந்தபோது அங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இங்கு மாணவர்கள் கூடி இருப்பதைக் கண்டதும் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

பேச்சு வார்த்தை

இதனையடுத்து மாணவ, மாணவிகள் அந்த பஸ்சுக்குள் முண்டியடித்து ஏறினார்கள். மேலும் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர். சிறிது தூரம் பஸ்சை இயக்கிய டிரைவர் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவதை கண்டு பஸ்சை மிண்டும் நிறுத்தினார்.

அப்போது அவர் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் அனைவரும் இறங்குமாறு அறிவுறுத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து பஸ்கண்டக்டர் திருவள்ளூர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

இந்த வழியாக மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது மாணவர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அடுத்த பஸ்சில் சென்றனர். இதன் காரணமாக அந்த பஸ் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.


Next Story