பவானிசாகர் அணை முன் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தொடக்கம்; பொதுமக்கள் மகிழ்ச்சி


பவானிசாகர் அணை முன் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தொடக்கம்; பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Feb 2022 2:57 AM IST (Updated: 26 Feb 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணை முன் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பவானிசாகர்
பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அது சேதம் அடைந்து ஓட்டை விழுந்தது. இதன்காரணமாக பாலத்தில் வாகனங்கள் செல்ல கடந்த 2018-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.  இதனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதன்காரணமாக புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை, கொத்தமங்கலம், புதுபீர்கடவு, பட்ரமங்கலம் மற்றும் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வந்தனர். 
இதைத்தொடர்ந்து, பழுதடைந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்ட கடந்த 2019-ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து புதிய பால கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. 
தற்போது பாலம் கட்டும் பணி முடிவடைந்து விட்டது. இதைத்தொடர்ந்து புதிய பாலத்தில் நேற்று தற்காலிகமாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அந்த பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story