தொழில் அதிபர், விவசாயிகளிடம் ஏலக்காய் வாங்கி விற்றதில் ரூ.3¾ கோடி மோசடி; வியாபாரி கைது
தொழில் அதிபர், விவசாயிகளிடம் ஏலக்காய் வாங்கி விற்பனை செய்ததில் ரூ.3¾ கோடி மோசடி செய்த போடியை சேர்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தேனி:
தொழில் அதிபர், விவசாயிகளிடம் ஏலக்காய் வாங்கி விற்பனை செய்ததில் ரூ.3¾ கோடி மோசடி செய்த போடியை சேர்ந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ஏலக்காய் வியாபாரி
தேனி சுப்பன்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 37). தொழில் அதிபரான இவர், ஏலக்காய் மொத்த விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் போடி திருமலாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (41) என்பவர் ஏலக்காய்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தார். இவருடன் சேர்ந்து, அவரது தந்தை ஜெயபால், தாய் ஜெயந்தி, மனைவி நிவேதினி ஆகியோரும் ஏலக்காய்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தனர்.
அந்த வகையில் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கத்துரையிடம் கடந்த ஆண்டு சுமார் 28 டன் ஏலக்காய் கொள்முதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.3 கோடியே 99 ஆயிரத்து 37 ஆகும். அதில் ரூ.2 கோடியே 14 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.86 லட்சத்து 19 ஆயிரத்து 37 கொடுக்காமல் இருந்தனர். அந்த பணத்தை தங்கத்துரை கேட்டு வந்த நிலையில், பணத்தை கொடுக்காமல் ராஜேஷ் தலைமறைவாகி விட்டார்.
ரூ.3¾ கோடி மோசடி
இதுகுறித்து தங்கத்துரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதேபோல், மேலும் சிலரும் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்த போது, தங்கத்துரையிடம் மோசடி செய்தது போன்றே, போடியை சேர்ந்த ஏலக்காய் விவசாயி கண்ணனிடம் ஏலக்காய் கொள்முதல் செய்ததில் ரூ.28 லட்சத்து 55 ஆயிரத்து 580, சிபி என்ற விவசாயியிடம் ரூ.14 லட்சத்து 34 ஆயிரத்து 70, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறையை சேர்ந்த பிலால்கே நவாத் என்பவரிடம் ரூ.2 கோடியே 23 லட்சத்து 72 ஆயிரத்து 616, இடுக்கி மாவட்டம் ராஜகுமாரியை சேர்ந்த சஜீ என்பவரிடம் ரூ.22 லட்சத்து 77 ஆயிரத்து 980 என மொத்தம் ரூ.3 கோடியே 75 லட்சத்து 59 ஆயிரத்து 243 மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த மோசடி குறித்து ராஜேஷ், நிவேதினி, ஜெயபால், ஜெயந்தி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜேசை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவி உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story