கடலூர் அருகே பரபரப்பு தூங்கிக்கொண்டு இருந்த தாய் மீது கொடூர தாக்குதல் மகனை பிடித்து போலீஸ் விசாரணை
கடலூர் அருகே தூங்கிக்கொண்டு இருந்த தாயை கொடூரமாக தாக்கிய மகனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். ஜெயலட்சுமி நேற்று காலை அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது மகன் வில்லரசு திடீரென்று, அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து தாய் என்று கூட பாராமல் ஜெயலட்சுமியை சரமாரியாக தாக்கினார்.
தீவிர சிகிச்சை
பெற்ற மகனே தன்னை தாக்குவதை கண்டு அதிர்ந்து போன ஜெயலட்சுமி, என்ன செய்வது என்று தெரியாமல் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ஜெயலட்சுமி தலை மற்றும் கைகளில் படுகாயம் அடைந்து ரத்த காயங்களுடன் கிடந்தார்.
உடனே அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் துறைமுக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இதில் தொடர்புடைய அவருடைய மகன் வில்லரசை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வில்லரசை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தாயுடன் வசித்து வந்த அவர், தற்போது பெற்ற தாய் என்று கூட பாராமல் அவரையே தாக்கி இருப்பது தெரியவந்தது. இந்த கொடூர தாக்குதலுகான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story