கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி, கொடைக்கானலுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். படகு, சைக்கிள் சவாரி செய்து அவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
கொடைக்கானல்:
சுற்றுலா பயணிகள்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.
அதன்படி, சிறந்த கோடை வாசஸ்தலமான கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் சுற்றுலா வேன், பஸ்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார், வாகன நெரிசல் ஏற்பட்ட இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
படகு சவாரி
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகலில் மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான சூழல் நிலவுகிறது. மாலை முதல் காலை வரை கடுமையான குளிர் வாட்டுகிறது. இந்த சீதோஷ்ண சூழலை அனுபவித்தவாறு நகரை ஒட்டியுள்ள சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
குறிப்பாக ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர்ராக், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றியுள்ள சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story