கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகி ஆதரவாளர்களுடன் காடுவெட்டி குரு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதால் பரபரப்பு


கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகி ஆதரவாளர்களுடன் காடுவெட்டி குரு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Feb 2022 11:33 PM IST (Updated: 27 Feb 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் காடுவெட்டி குரு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

ஜெயங்கொண்டம், 
கட்சியில் இருந்து நீக்கம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. நகர செயலாளராக இருந்து வந்தவர் மாதவன் தேவா (வயது 29). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் மாநில தலைவர் கோ.க.மணி நகர செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டார்.
இந்தநிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாதவன் தேவா தனது பிறந்தநாளையொட்டியும், 4 வார்டுகளில் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையொட்டியும் நேற்று மாலை தனது ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் காடுவெட்டியில் உள்ள மறைந்த முன்னாள் வன்னியர் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெ.குருவின் மணி மண்டபத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்தார்.
வாக்குவாதம்
அப்போது காடுவெட்டியிலுள்ள சிலருக்கு மாதவன் தேவா தனது ஆதரவாளர்களுடன் வரும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாதவன் தேவாவை உள்ளே விடக்கூடாது என கூறி கட்சி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரம், ரவிசக்கரவர்த்தி உள்ளிட்ட போலீசார் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்திற்கு முன்பாகவே மாதவன் தேவாவுடன் வந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாதவன் தேவா ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் தற்பொழுது அங்கு செல்ல வேண்டாம் எனவும் மற்றொரு நாள் செல்லலாம் எனக்கூறி மாதவன்தேவா மற்றும் அவரது ஆதரவாளர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story