கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு தாமதம்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு தாமதம்
x
தினத்தந்தி 28 Feb 2022 9:04 PM IST (Updated: 28 Feb 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த கிருஷ்ணா நதி நீர் கால்வாயின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதி நீர் திட்டம்

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும்.

இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரம், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதாவது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது. இதன் பணிகள் 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1995-ல் முடிக்கப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சேதம்

இந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்ததால் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா நதி கால்வாயில் பல இடங்களில் கரை சேதம் அடைந்தது.

இந்த சேதமடைந்த கால்வாயை சீரமைக்க தமிழக அரசு ரூ.24 கோடி நிதி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் கால்வாய் சீரமைக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர்நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 6.20 கிலோ மீட்டர் தூரம் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாத கடைசியில் 2 நாட்கள் கொட்டித் தீர்த்த மழையால் கிருஷ்ணா நதி கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் கால்வாய் சீரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பணிகள் விறுவிறுப்பு

இதன் காரணமாக சிற்றப்பாக்கம் தடுப்பணை பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஏப்ரல் மாதம் கடைசி வரை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது. இந்த பணியின் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 31.81 அடியாக பதிவாகியது. தற்போது 2.193 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.


Next Story