நெமிலி பேரூராட்சி 3-வது வார்டில் வெற்றிபெற்ற பா.ம.க. வேட்பாளர் கடத்தல். உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்
நெமிலி பேரூராட்சியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ம.க. வேட்பாளரை கடத்தியதாக உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெமிலி
நெமிலி பேரூராட்சியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ம.க. வேட்பாளரை கடத்தியதாக உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இழுபறி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், தி.மு.க. 5 வார்டுகளிலும், பா.ம.க. ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. இதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது.
பெரும்பான்மை இல்லாததால் நெமிலி பேரூராட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நிலவிவருகிறது. இந்த நிலையில் 3-வது வார்டில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரசேகர் பழனி முருகன் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பா.ம.க. வேட்பாளர் கடத்தல்
இந்தநிலையில் பா.ம.க. நிர்வாகிகள் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெமிலி போலீசார் ஒட்டன் சத்திரத்திலிருந்து சந்திரசேகரை அழைத்து வருவதாக தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், இதில் அரசியல் அரசியல் தலையீடு இருப்பதாகக்கூறி, சந்திரசேகரை மீட்டுத்தருமாறு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
ஆனால் நேற்று மாலைவரை சந்திரசேகர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த சந்திரசேகரின் தம்பி பாபு, மகன்கள் மற்றும் உறவினர்கள் நெமிலி பஸ்நிலையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மற்றும் நெமிலி போலீசார் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
Related Tags :
Next Story