வாயில் கருப்பு துணி கட்டி வந்து மக்கள் நீதி மய்யத்தினர் மனு
மாநகராட்சி, நகராட்சிகளில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் வாயில் கருப்பு துணி கட்டியபடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர்
மாநகராட்சி, நகராட்சிகளில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் வாயில் கருப்பு துணி கட்டியபடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
வாயில் கருப்பு துணி
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஜீவா மற்றும் நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டியபடி மனு கொடுக்க வந்தனர்.
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பெயரில் மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அதிகாரப்பரவலாக்கல் மூலமே சிறந்த அரசு நிர்வாகத்தை தர முடியும் என்பதில் மக்கள் நீதி மய்யம் அசையா நம்பிக்கை வைத்திருக்கிறது. நகர்ப்புறங்களிலும் கிராம சபைகள் போன்ற மக்கள் பங்கேற்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும். கிராம சபைகளை போலவே நகரங்களிலும் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக, தமிழக அரசு தமிழ்நாடு நகராட்சி சட்டத்தில் மாநகராட்சி மற்றம் நகராட்சிகளில் மக்கள் பங்கேற்புடைய ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை உருவாக்க வழிவகை செய்கிறது.
நடைமுறைப்படுத்த வேண்டும்
ஏரியா சபை, வார்டு கமிட்டியை சிறப்பாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள், துறைசார் வல்லுனர்களிடம் இதன் செயலாக்கம் குறித்து விரிவான கருத்துருக்களை பெறுவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து பிரதிநிதிகள் பதவியேற்கும் இந்த நிலையில் ஏரியா சபை, வார்டு கமிட்டி செயல்முறை விதிகள் விரைவில் வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மனு கொடுக்க கூட்ட அரங்குக்குள் நுழைய முயன்றபோது போலீசார் குறிப்பிட்ட நபர்களை மட்டும் உள்ளே செல்லுமாறு கூறி தடுத்ததால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஓய்வூதியம்
திருப்பூர் மாவட்ட கட்டுமானம் அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘நலவாரிய அலுவலகங்கள் மூலமாக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்படுகிறது. நலவாரிய அட்டைகள் பழைய ரேஷன்கார்டு அடிப்படையில் வயதை சரி பார்த்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது 60 வயது பூர்த்தியாகும் ஓய்வூதிய அரசாணை வழங்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் கேட்கப்படுகிறது. இந்த ஆவணங்களில் வயது குளறுபடிகள் இருப்பதால் படிப்பறிவில்லாத கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதை முறைப்படுத்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக புதிய பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பதிவு செய்ய வரும் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். நலவாரிய அட்டைப்படி ஓய்வூதியம் வழங்கவும், இணையதள குளறுபடிகளை சரி செய்து நலவாரிய உதவிகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story