கோனியம்மன் கோவில் தேரோட்டம்
கோனியம்மன் கோவில் தேரோட்டம்
கோவை
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த மாதம் 15-ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 22-ந்தேதி கோவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கோனியம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் சிம்ம, அன்னம், வெள்ளையானை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோவிலில் நடப்பட்ட அக்னி கம்பத்திற்கு தினமும் பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.
இதன்பின்னர் நேற்று முன்தினம் கோனியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓதுவார் கண்ணப்பனின் திருமுறை பாராயணத்தோடு பக்தர்கள் சூழ கோனியம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
தேரோட்டம்
இதற்கிடையே கடந்த சில நாட்களாக ராஜவீதி தேர்முட்டியில் உள்ள கோனியம்மன் திருத்தேர் அலங்கரிக்கும் பணி நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதையொட்டி கோவை கோனியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் உற்சவர் அதிகாலை பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வேதமந்திரம் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளினார்.
தேரோட்டத்தையொட்டி நேற்று காலை முதல் திருத்தேர் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அவர்கள் திருத்தேரில் எழுந்தருளிய கோனியம்மனை தரிசித்தனர். அப்போது பக்தர்கள் உப்பு, மிளகு வாங்கி திருத்தேர் மீது வீசி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மதியம் 2.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரா சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் செந்தில் வேலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தேர்நிலைத்திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஆடி அசைந்து ஒப்பணக்கார வீதியை நோக்கி வந்தது. திருத்தேரின் முன்பும், பின்பும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக திருத்தேரின் இருபுறமும் நீண்ட கயிற்றை கட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story