ஆட்டோ டிரைவரிடம் ரூ 14 லட்சம் மோசடி செய்த லண்டன் இளம்பெண்

சேலை வியாபாரத்தில் பங்கு தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த லண்டன் இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவை
சேலை வியாபாரத்தில் பங்கு தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த லண்டன் இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
லண்டன் இளம்பெண்
கோவை குனியமுத்தூர் ஹர்ஷா கிளாசிக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாரூக் (வயது 51). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர் நில புரோக்கராகவும் உள்ளார். இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலம் லண்டனை சேர்ந்த சன்ஷைன் (25) என்ற இளம்பெண் அறிமுகம் ஆனார்.
பின்னர் பாரூக் அந்த இளம்பெண்ணுக்கு தனது செல்போன் எண்ணை கொடுத்ததால் அவர் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
சேலை வியாபாரம்
அப்போது பேசிய அந்த இளம்பெண் தான், லண்டனில் சேலை வியாபாரம் செய்து வருவதாகவும், இந்தியாவில் உள்ள சேலைகளுக்கு லண்டனில் கிராக்கி அதிகமாக இருப்பதால் அந்த சேலைகளை வாங்கி அனுப்ப வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதற்காக தான் பணம் அனுப்பி வைப்பதாகவும், சேலைகளை நீங்கள் வாங்கி அனுப்பினால் அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு கொடுப்பதாகவும் கூறினார். அத்துடன் சேலைகளை வாங்க ரூ.32 லட்சம் லண்டன் பணமான பவுண்ட்ஸ்களை விமானத்தில் பார்சல் மூலமாகவும் அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதை பாரூக் உண்மை என்று நம்பினார்.
ரூ.14 லட்சம் அனுப்பினார்
இந்த நிலையில் பாரூக்கின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் லண்டன் விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் முகவரிக்கு ஒரு பார்சல் அனுப்பி உள்ளதாகவும், அதை உங்களுக்கு அனுப்பி வைத்து நீங்கள் பெற வேண்டும் என்றால் ரூ.14 லட்சத்து 200 அனுப்ப வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய பாரூக், அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சத்தை அனுப்பினார். அதன் பின்னர் பேசிய அந்த நபர் ஒருசில நாட்களில் அந்த பார்சல் கோவை விமான நிலையத்துக்கு வந்துவிடும். நீங்கள் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.
போலீசார் விசாரணை
ஆனால் அவர் கூறியபடி எந்த பார்சலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாரூக் அந்த இளம்பெண் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது அவர் எடுத்து பேசவில்லை. பலமுறை தொடர்பு கொண்டாலும் அவர் அதை எடுத்து பேசவில்லை.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த பாரூக் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாரூக் தனது மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த நகையை விற்று அந்த பணத்தை அனுப்பியதாக தெரிகிறது. எனவே அந்த பணத்தை மீட்க போலீசார் தீவிர நடவடிக்ைக எடுத்து வருகிறார்கள். மேலும் இதுபோன்று யாராவது பணம் அனுப்புங்கள் என்று கூறினால் நம்பி அனுப்பி ஏமாற வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story