பொள்ளாச்சி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சியாமளா போட்டியின்றி தேர்வு
பொள்ளாச்சி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சியாமளா, துணைத்தலைவராக கவுதமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சியாமளா, துணைத்தலைவராக கவுதமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 151 போட்டியிட்டனர். கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் தி.மு.க. 30 இடங்களையும், ம.தி.மு.க. ஒரு இடத்தையும், அ.தி.மு.க. 3 இடங்களையும், சுயேச்சை 2 இடங்களையும் கைப்பற்றினர். இதை தொடர்ந்து கடந்த 2-ந்தேதி புதிதாக கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தலைவர் பதவி பெண்கள் (பொது) ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் நகராட்சி தலைவர் வேட்பாளராக தி.மு.க.வை சேர்ந்த 10-வது வார்டு கவுன்சிலர் சியாமளா நவநீதகிருஷ்ணனை தி.மு.க. தலைமை அறிவித்தது.
தலைவர் போட்டியின்றி தேர்வு
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. புதிய கட்டிடத்தில் முதன் முறையாக நகராட்சி மன்ற கூட்டரங்கில் புதிய கவுன்சிலர்கள் வந்து அமர்ந்தனர். அங்கு நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் தவிர யாரும் அனுமதிக்கப் படவில்லை.
தலைவர் பதவிக்கு வேட்பாளராக சியாமளா வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் மறைமுக தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து சியாமளா தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி அறிவித்தார்.
துணைத்தலைவர்
பின்னர் ஆணையாளர், சியாமளாவை அழைத்து நகராட்சி தலைவர் இருக்கையில் அமர வைத்தார். பின்னர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து கவுன்சிலர்களும் நகராட்சி தலைவர் சியாமளாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து பகல் 2.30 மணிக்கு துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதற்கு 35-வது வார்டு கவுன்சிலர் கவுதமன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் துணை தலைவராக கவுதமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு நகராட்சி தலைவர் சியாமளா, ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story