வங்கியில் ரூ.67 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது


வங்கியில் ரூ.67 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது
x
தினத்தந்தி 5 March 2022 9:37 PM IST (Updated: 5 March 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியில் ரூ.67 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை

கோவையில் போலி நகைகளை அடமானம் வைத்து வங்கியில் ரூ.67 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

வங்கி

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவர் ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தேசியமையமாக்கப்பட்ட வங்கியான சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் நகை மதிப்பீட்டளராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார்.

வாடிக்கையாளர்களிடம் கார்த்திக் நெருங்கி பழகி உள்ளார். இதனால் அவரை, பலர் நம்பினார்கள். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் நகையை அடகு வைக்க இவரிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து விடுவார்கள். மேலும் மறு அடகு வைக்கவும் இவரை அணுகி உள்ளனர்.

ரூ.67 லட்சம் மோசடி

இந்த நிலையில் கார்த்திக் வாடிக்கையாளர்கள் கையெழுத்து போட்டு கொடுத்த விண்ணப்பத்தை எடுத்து வைத்துக்கொள்வார். பின்னர் வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து சரியாக இல்லை என்று கூறி மற்றொரு விண்ணப்பதில் கையெழுத்து வாங்கிக்கொள்வார்.

பின்னர் அந்த விண்ணப்பத்தை வைத்து, வாடிக்கையாளர்போல் போலி நகைகளை அடமானம் வைத்து, காசாளரிடம் கொடுத்து பணத்தை வாங்கிக்கொள்வார். வாடிக்கையாளர்தான் பணத்தை வாங்கி வைக்குமாறு கூறியதாக காசாளரிடமும் கார்த்திக் கூறுவார்.

இந்த நிலையில் வங்கி தணிக்கை செய்தபோது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கார்த்திக் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.67 லட்சத்தை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நகை மதிப்பீட்டாளர் கைது

இதுகுறித்து வங்கி மேலாளர் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கார்த்திக் தலைமறைவானார்.

தொடர்ந்து அவரை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கார்த்திக்கை கோவை தெலுங்குபாளையத்தில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்தனர். பின்னர் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Next Story