வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி பாதிரியார் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி  பாதிரியார் கைது
x
தினத்தந்தி 7 March 2022 12:31 AM IST (Updated: 7 March 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

வடலூர், 

பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் புருஷோத்தமன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கும், வடலூர் ராகவேந்திரா நகரில் பாதிரியாராக உள்ள மந்தாரக்குப்பம் கம்பன் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ஜோசப்ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் ஜோசப்ராஜா மற்றும் அவரது மனைவி ராகவ சங்கீதா ஆகியோர் தங்களால் வெளிநாட்டில் வேலை வாங்கி தரமுடியும், அதற்கு பணம் கொடுத்தால் போது என்று புருஷோத்தமனிடம் கூறியுள்ளனர்.

மோசடி

இதை உண்மை என நம்பிய புருஷோத்தமன், ஜோசப்ராஜா, ராகவ சங்கீதாவிடம் வெளிநாட்டில் வேலை வாங்குவதற்காக ரூ.4 லட்சத்து 90 கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் இதேபோல் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி, வேப்பங்குறிச்சியை சேர்ந்த குமார் மகன் மணியரசன் என்பவரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம், பண்ருட்டியை சேர்ந்த கோகுல் மகன் ராஜ்சரணிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம், வடலூர் ராகவேந்திரா நகரை சேர்ந்த சஞ்சய் மகன் பார்த்திபனிடம் இருந்து ரூ.3 லட்சம், சஞ்சய் மகள் கியூரி மதுராந்ததியிடம் இருந்து ரூ.1 லட்சம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ஜெயசீலன் மகன் பாலாஜியிடம் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஜோசப்ராஜா, ராகவ சங்கீதா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்ராஜை கைது செய்தனர். 
மேலும்  ராகவசங்கீதாவை தேடி வருகின்றனர். 

Next Story