வால்பாறை அருகே கோவில்களை சூறையாடிய காட்டு யானைகள்

வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியில் மாரியம்மன், மதுரை வீரன் கோவில்களை காட்டு யானைகள் சூறையாடின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியில் மாரியம்மன், மதுரை வீரன் கோவில்களை காட்டு யானைகள் சூறையாடின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
காட்டு யானைகள் முகாம்
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான், வரையாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் தண்ணீர் மற்றும் உணவுத்தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் டேன்டீ சிங்கோனா எஸ்டேட் முதல் பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்பு அருகே உள்ள வனப்பகுதியில் 2 நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
கோவில்கள் சூறை
இந்த காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு அருகே உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் புகுந்தன. பின்னர் கோவில் பூஜை அறையில் இருந்த பொருட்களை தூக்கி எறிந்தும், அங்கிருந்த சாமி சிலையை தள்ளிவிட்டு, பீரோவை உடைத்து அதில் இருந்த அலங்கார பொருட்களை வீசி சூறையாடியன. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன.
பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் மதுரை வீரன் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களையும் சூறையாடின. தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. கோவில்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து தூரமாக இருந்ததால் பொதுமக்களுக்கு சத்தம் கேட்கவில்லை.
பொதுமக்கள் பீதி
இதுகுறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணயில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்கு அருகே முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்ல மிகவும் அச்சமாக உள்ளது.
எனவே குடியிருப்பு அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






