நெகமம் பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


நெகமம் பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 9 March 2022 8:10 PM IST (Updated: 9 March 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நெகமம்

நெகமம் பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நிலக்கடலை சாகுபடி

நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பிரதான தொழிலாளாக விவசாயம் உள்ளது. இந்த பகுதிகளில் தென்னை, வாழை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த பகுதியில் மானாவாரியில் மக்காச்சோளம், சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. அத்துடன் கம்பு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நிலக்கடலைக்கு நல்ல கிராக்கி உள்ளதால் நெகமம் பகுதியில் விவசாயிகள் இறவைப்பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நல்ல மகசூல்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சமீப காலமாக எண்ணெய் வித்துப்பயிர்களான எள், சூரியகாந்தி, நிலக்கடலை போன்றவை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் அவற்றின் வரத்து குறைந்து நல்ல விலை கிடைக்கும் சூழல் நிலவுகிறது. எனவே நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டு உள்ளோம்.

செம்மண் பூமியில் நிலக்கடலை நல்ல மகசூல் தரக்கூடியதாகும். ஏக்கருக்கு 50 கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படுகிறது. விதைப்புக்கு முன் சூடோமோனாஸ் அல்லது டிரைகோடிரம்மா கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது விதை முளைப்புத்திறன் அதிகரிப்பதுடன் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைகிறது. 

விதைத்த 5 நாட்கள் வரை உயிர் தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு ஈரப்பதத்தை பொறுத்து வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

ஏக்கருக்கு 600 கிலோ வரை...

களைகளை முறையாக கட்டுப்படுத்து மகசூலை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் சரியான பருவத்தில் மண் அணைக்க வேண்டியதும் முக்கியமானதாகும். மேலும் இலைப்பேன், அசுவினி, வெட்டுப்புழு, சுருள் பூச்சி, சிவப்பு கம்பளிப்புழு மற்றும் வேரழுகல் நோய் தாக்காமல் பராமரிக்க வேண்டும்.

முறையாக பராமரித்தால் ஏக்கருக்கு 600 கிலோ வரை நிலக்கடலை மகசூல் பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story