தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 9 March 2022 9:29 PM IST (Updated: 9 March 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

வாகன ஓட்டிகள் அவதி

கோவை பாலசுந்தரம் சாலையில் பி.ஆர்.எஸ். போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் அருகில் குடிநீர் குழாய் பதிக்க சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளம் சரியாக மூடப்படாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பள்ளத்தை சரியாக மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோஜா, கோவை.

பஸ்கள் நின்று செல்லுமா?

சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகம் பொள்ளாச்சி மெயின்ரோட்டில் உள்ளது. அங்கு ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் திருப்பூர், பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் பயணிகள், ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் சிரமம் அடைகின்றனர். இந்த பிரச்சினைக்கு போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.
பரதன், சுல்தான்பேட்டை.

தெருநாய்கள் தொல்லை

கோவை கணபதி புதூர் 8-வது வீதி தரணி நகர் பகுதியில் சுமார் 50-க்கும் தெருநாய்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டமாக சுற்றி வருகின்றன. மேலும் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்க வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கைகளில் குச்சிகளுடன் தெருநாய்கள் தொல்லைக்கு பயந்து செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
முத்து, கணபதி.

சாதாரண பஸ்கள் இயக்கப்படுமா?

கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக கிளையில் இருந்து காந்திபுரம், உக்கடம் செல்லும் அரசு பஸ்கள் சொகுசு பஸ்களாக இயக்கப்படுகின்றன. இதனால் அந்த பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சொகுசு பஸ்களை சாதாரண பஸ்களக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்யா, சோமனூர்.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
சாலை சீரமைக்கப்பட்டது

கோவை கணபதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அந்த சாலையை அதிகாரிகள் சீரமைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
மூர்த்தி, கணபதி.

சாலையில் ஆபத்தான பள்ளம் 

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் உள்ளது. இங்கு தனியார் பேக்கரி முன்பு சாலையில் ஆபத்தான பள்ளம் இருக்கிறது. இதன் காரணமாக இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த குழிக்குள் விழுந்து விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிச்செல்லும் அபாய நிலையும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
ரவிக்குமார், துடியலூர். 

பூட்டிக்கிடக்கும் கழிப்பிடம்

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள அம்மா உணவகம் அருகே கழிவறை இருக்கிறது. இந்த பொதுக்கழிப்பிடம் பூட்டிய நிலையில் யாருக்கும் எவ்வித பயனும் இல்லாமல் இருக்கிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த ஏழை-எளிய மக்கள் அவசரத்துக்கு கழிவறை செல்ல முடியாமல் திறந்த வெளியே பயன்படுத்தும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூட்டிக்கிடக்கும கழிப்பிடத்தை திறக்க வேண்டும்.
சாந்தகுமார், ராமநாதபுரம். 

ஒளிராத விளக்குகள்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனியில் சாலையின் நடுவே சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பல விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிர்வது இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான இந்த விளக்குகளை சரிசெய்து ஒளிர வைக்க வேண்டும்.
அருள்மொழி, தொப்பம்பட்டி. 

சாய்ந்து கிடக்கும் வழிகாட்டி பலகை

கோவை லங்கா கார்னர் அருகே ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கான வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டு இருந்தது. அடையாளம் தெரியாத வாகனம் இந்த பலகை மீது மோதியதால் தற்போது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு வழி தெரியாத நிலை உள்ளது. அத்துடன் விபத்தை ஏற்பத்தும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் காணப்படும் வழிகாட்டி பலகையை சீரமைக்க வேண்டும். 
விக்னேஷ், டவுன்ஹால்.


1 More update

Next Story