14 பவுன் நகைகளை திருடிய ஊழியர் சிக்கினார்


14 பவுன் நகைகளை திருடிய ஊழியர் சிக்கினார்
x
தினத்தந்தி 9 March 2022 11:20 PM IST (Updated: 9 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே செயற்கை பற்கள் தயாரிப்பவர் வீட்டில் 14 பவுன் நகைகளை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தேனி: 

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி அரசு நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவர், பழனிசெட்டிபட்டியில் செயற்கை பற்கள் தயாரிக்கும் ஆய்வுக்கூடம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அவர் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது, அதில் இருந்த 4 தங்க சங்கிலிகள், ஒரு தங்க முத்து மாலை, குழந்தையின் மோதிரம் ஒன்று என 14 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.

 இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பிரகாஷின் ஆய்வுக்கூடத்தில் வேலை பார்த்த மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் இந்திரா நகரை சேர்ந்த சண்முகம் மகன் ஹரன்குமார் (22) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். அதில், "ஆய்வுக்கூடத்துக்கு தேவையான பொருட்களை எடுத்து வருமாறு உரிமையாளர் பிரகாஷ் என்னிடம் வீட்டுச் சாவியை கொடுத்து அடிக்கடி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வீட்டில் யாரும் இல்லாததால் பீரோவை திறந்து பார்த்தேன். அதில் நகைகள் இருந்தன. மொத்தமாக திருடினால் மாட்டிக் கொள்வேன் என நினைத்து ஒவ்வொரு முறை செல்லும் போதும் ஒரு நகையை எடுத்து வந்தேன். சிறுகச் சிறுக திருடிய நிலையில் இப்போது மாட்டிக் கொண்டேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 14 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். 

Next Story