உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து மாமல்லபுரம் திரும்பிய மருத்துவ கல்லூரி மாணவர் பேட்டி


உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து மாமல்லபுரம் திரும்பிய மருத்துவ கல்லூரி மாணவர் பேட்டி
x
தினத்தந்தி 10 March 2022 7:40 PM IST (Updated: 10 March 2022 7:40 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து ஹங்கேரி நாட்டுக்கு ெரயிலில் வரும்போது உணவு கிடைக்காமல் மயக்கமடைந்து விட்டேன் என்று மாமல்லபுரத்தை அடுத்த பூந்தண்டலம் கிராமத்திற்கு திரும்பிய மாணவர் பேட்டி அளித்தார்.

3-ம் ஆண்டு மருத்துவ மாணவர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர், பி.வி.கே.வாசு. விவசாயியான இவரது மகன் வாசு சுசீந்திரன் (வயது 22). இவர் கடந்த 2019-ம் ஆண்டு உக்ரைன் நாட்டுக்கு சென்று அங்குள்ள கார்கிவ் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது உக்ரைனில் ரஷியா நாட்டினர் போர் தொடுத்து வரும் சூழலில் அங்குள்ள இந்திய மாணவர்கள் பலர் இந்திய தூதரகத்தின் உதவியுடன் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பி.வி.கே.வாசு மகன் மருத்துவ மாணவர் வாசு சுசீந்திரன் இந்திய தூதரகத்தின் உதவியுடன் டெல்லி அழைத்து வரப்பட்ட அவர் நேற்று தனது சொந்த ஊரான பூந்தண்டலம் கிராமத்திற்கு வந்தார். மிகவும் பாதுகாப்புடன் ஊர் திரும்பிய அவரை அந்த ஊர் மக்கள், பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

மாணவர் வாசு சுசீந்திரன் உக்ரைனில் நடைபெற்று வரும் போர் சூழல் குறித்தும், தாங்கள் அதில் சிக்கி மீண்டு வந்த அனுபவம் குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க ஆரம்பித்த உடன் கார்கிவ் நகரில் உள்ள ஒரு பதுங்கு குழியில் நான் உள்பட என்னுடன் படிக்கும் 70 மாணவர்கள் பதுங்கி இருந்தோம். ஒரு தமிழர் எங்களுக்கு உணவு அளித்து உதவி செய்தார்.

உணவு, தண்ணீர் வழங்கி உபசரிப்பு

பின்னர் இந்திய தூதரகத்தினர் எங்களை கார்கிவ் நகரில் இருந்து ஹங்கேரி நாட்டிற்கு ரெயில் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்தனர். ரெயிலில் 37 மணி நேரம் பயணம் செய்யும்போது எங்களுக்கு உணவு, தண்ணீர் கூட கிடைக்காமல் அவதியுற்றோம். ெரயிலில் உள்ள கழிவறையில் உள்ள குழாய் நீரை குடித்து பசியாறினோம்.

பல மாணவர்கள் பசியின் கொடுமையால் மயக்கமடைந்தனர். நானும் மயக்கம் அடைந்தேன். பிறகு ஒரு வழியாக ஹங்கேரி நாட்டிற்கு வந்து சேர்ந்த பிறகு எங்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் உணவு, தண்ணீர் வழங்கி உபசரித்தனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக எங்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு டெல்லியில் இருந்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் எங்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் 3 ஆண்டுகள் என்னுடைய படிப்பு காலம் உள்ளதால் எனக்கு மீண்டும் மருத்துவ படிப்பினை தமிழகத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ தொடர தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து மாற்று ஏற்பாடுகளை செய்து உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு மாணவர் வாசு சுசீந்திரன் கூறினார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய மாணவர் வாசுசுசீந்திரன், தற்காலிகமாக தனது மருத்துவ படிப்பு தடைபட்டுள்ளதால், கால, நேரத்தை வீணாக்காமல் தனது தந்தையுடன் வேர்க்கடலை, நெற்பயிர் பயிரிடும் விவசாய பணிக்கு செல்வதையும் காண முடிந்தது.


Next Story