என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாகும் வரை சிறைத்தண்டனை பெற்ற யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்பட்டார்
என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாகும் வரை சிறைத்தண்டனை பெற்ற யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்பட்டார்
கோவை
என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாகும் வரை சிறைத்தண்டனை பெற்ற யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்பட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
எனவே இந்த வழக்கில் சேலம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் (வயது 35), அமுதரசு (42) உள் பட கூட்டாளிகள் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அமுதரசு தலைமறைவாக இருந்தார்.
இந்த வழக்கு முதலில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப் பட்டு வந்தது. கோகுல்ராஜின் தாயார் சித்ரா வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
சாகும் வரை சிறை
அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத் துக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை 2 ஆண்டுகளாக நடந்து வந்தது.
அதில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜ், அருண், குமார் மற்றும் சதீஷ்குமார், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஸ்ரீதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என்றும்,
சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்வதாகவும் கடந்த 5-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் மற்றும் அவருடைய கார் டிரைவர் உள்பட 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து 8-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்பிறகு யுவராஜ் உள்பட அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மத்திய சிறைக்கு மாற்றம்
இந்த நிலையில் யுவராஜை கோவை மத்திய சிறைக்கு மாற்றுவது என்று மதுரை மத்திய சிறை நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி அவர் போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கோவைக்கு அழைத்து வரப்பட்டு மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை சிறைத்தண்டனை பெற்ற யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story