கேளம்பாக்கம் அருகே கோவில் வளாகத்தில் முதியவர் கொலை
கேளம்பாக்கம் அருகே கோவில் வளாகத்தில் முதியவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கொலை
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). திருமணம் ஆகாதவர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் மலைக்கோவில் மற்றும் திருப்போரூர் முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அங்கு கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு கோவில் அருகிலேயே தங்கி விடுவதும் ஒரு சில நாட்களில் புதுப்பாக்கதில் உள்ள அவரது சகோதரி விநாயகம்மாள் வீட்டுக்கு சென்று விடுவதுமாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு பெருமாள் புதுபாக்கம் ஆஞ்சநேயர் மலை கோவிலில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தில் வெளி வளாகத்தில் தங்கி இருந்தார். நேற்று மதியம் 2 மணி வரை ஒரே இடத்தில் போர்வை போர்த்தி படுத்து இருந்தவரை அவருடன் பிச்சை எடுக்கும் முதியவர் தட்டி எழுப்ப போர்வையை விலக்கிய போது தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.
2 தனிப்படை
இது குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாள் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலையில் கல்லை போட்டு நசுக்கிய பெரிய சிமெண்டு பாறை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
கோவில் வாசலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மற்றும் கேளம்பாக்கம் - வண்டலூர் நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கேளம்பாக்கம் போலீசார் 2 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். பிச்சை எடுத்து வசிக்கும் முதியவர் கோவில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story