தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து பார்வுட் செல்லும் சாலையில் பல இடங்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீது மின்கம்பிகள் உரசும் அபாயம் காணப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் மின்கம்பிகளை உயர்த்தி பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகம், கூடலூர்.
கழிப்பறை இல்லாமல் அவதி
சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க தனியாக கழிப்பறை இல்லை. மாறாக உள்ள ஊழியர்கள் கழிப்பறையையும் பயன்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிபடுகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அலுவலக வளாகத்தில் தனி கழிப்பறை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கடேஷ், சுல்தான்பேட்டை.
குண்டும், குழியுமான சாலை
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே தனியார் வங்கிக்கும், வணிக வளாகத்துக்கும் இடையில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்பகிறது. அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. எனவே மோசமான நிலையில் உள்ள அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
நித்யா, பொள்ளாச்சி.
ரெயில்கள் நின்று செல்லுமா?
சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் 2 பயணிகள் ரெயில் நின்று செல்லும். ஆனால் திடீரென அந்த ரெயில்கள் நின்று செல்வது நிறுத்தப்பட்டது. தற்போது மாலை நேரத்தில் மட்டும் திருச்சி-பாலக்காடு ரெயில் மட்டுமே நிற்கிறது. எனவே காலையிலும் திருச்சி-பாலக்காடு ரெயில் நின்று செல்லும் வகையிலும், நாகர்கோவில் செல்லும் ரெயில்கள் நின்று செல்லும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சிங்காநல்லூர் ரெயில் நிலையம் விஷ ஜந்துகள் புகலிடமாக மாறவும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறாமலும் தடுக்கப்படும்.
கிரிகோரி, கோவை.
அதிகரிக்கும் விபத்துகள்
கோவை மாநகராட்சி 68-வது வார்டு கிழக்கு பவர் ஹவுஸ் சாலை உடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே பள்ளம் உருவாகி உள்ளதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ்குமார், கோவை.
பயணிகளுக்கு வீண் செலவு
மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் பல்லடம் செல்ல அவினாசி வழியாக திருப்பூர் சென்று, அங்கிருந்து வேறு பஸ்சில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பயணிகளுக்கு கால விரயம், வீண் செலவு ஏற்படுகிறது. எனவே சோமனூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை வழியாக பல்லடம் செல்லும் வகையில் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், அன்னூர்.
வேகத்தடை இல்லை
துடியலூர்-சரவணம்பட்டி சாலையில் அருகருகே தனியார் பள்ளிகள் உள்ளன. ஆனால் அங்குள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்ப வெளியே வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் தங்களது குழந்தைகளை அழைத்து வர பள்ளிக்கு வரும் பெற்றோரும் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
நிவேதா, வெள்ளக்கிணறு.
ஒளிராத விளக்குகள்
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனியில் சாலையின் நடுவே சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பல விளக்குகள் இரவு நேரத்தில் ஒளிர்வது இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான இந்த விளக்குகளை சரிசெய்து ஒளிர வைக்க வேண்டும்.
அருள்மொழி, தொப்பம்பட்டி.
குப்பைக்கு தீ வைப்பதால் பிரச்சினை
பொள்ளாச்சி-வால்பாறை சாலையோரத்தில் ஆவல்சின்னாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதனால் அதனருகில் உள்ள மரம் சேதம் அடைந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் புகைமூட்டம் அதிகரித்து, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும், தீ வைப்பதை தவிர்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தன், பொள்ளாச்சி.
நடைபாதையில் வாகனங்கள்
ஊட்டி லோயர் பஜாரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலை ஒட்டி நடைபாதையில் ஆட்டோக்கள் உள்பட வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர். மேலும் அங்கு தாறுமாறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை அங்கும், இங்கும் திருப்புவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதையில் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க வேண்டும்.
ஐஸ்வர்யா, ஊட்டி.
சுற்றுச்சூழல் பாதிப்பு
ஊட்டி அருகே தேனாடுகம்பையில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களிடம் முறையாக குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், தேனாடுகம்பை.
Related Tags :
Next Story