புத்தகம் வாசிக்கும் பழக்கம் சிறந்த மனிதனை உருவாக்கும்


புத்தகம் வாசிக்கும் பழக்கம் சிறந்த மனிதனை உருவாக்கும்
x
தினத்தந்தி 10 March 2022 10:31 PM IST (Updated: 10 March 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

புத்தகம் வாசிக்கும் பழக்கம் சிறந்த மனிதனை உருவாக்கும் என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் என்.சி.சி. மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.

கோவை

புத்தகம் வாசிக்கும் பழக்கம் சிறந்த மனிதனை உருவாக்கும் என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் என்.சி.சி. மாணவர்களுக்கு  கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கினார்.

கவர்னர் கோவை வருகை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மதியம் 2.55 மணியளவில் விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார். கோவை விமானநிலையத்தில் அவரை மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி மேயர் கல்பனா, மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. (பொறுப்பு) மகேஸ்வரி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா உள்ளிட்டோர் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு மாலை 4.45 மணி அளவில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், பேசும்போது கூறியதாவது:-

நினைவிடம் அமைக்க நடவடிக்கை

கோவையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட அளவிலோ அல்லது தாலுகா அளவிலோ சமூக வலைத்தளத்தில் குரூப் தொடங்கி, அதன் மூலம் தகவல்களை பறிமாறிக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவப்படைக்கு ஆற்றிய சேவை மகத்தானது. கோவையில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் தியாகத்தை தேசம் மறக்க கூடாது. 

அவர்களுக்கு நினைவிடம் அமைக்கலாம். இதற்கான நிலத்தை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து வழங்கலாம். மேலும் ராணுவ வீரர்களின் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சில நினைவு சின்னங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு பெருமை மற்றும் கடமை உணர்வு மேம்படும். 

கோவை மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் கடந்த 2020-21 ம் ஆண்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ரூ.1. கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 631 நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பிரதமரின் உதவித்தொகை திட்டத்தில் இருந்து ரூ.10 கோடியே 62 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

கடினமாக உழைக்க வேண்டும்

மேலும் என்.சி.சி. மாணவர்கள் பெரிதாக கனவு கண்டு, கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன், நல்ல ஆரோக்கியத்துடன் நேர மேலாண்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். புத்தகம் வாசிக்கும் பழக்கம் வாழ்க்கையில் உங்களை சிறந்த மனிதனாக உருவாக்கும். மேலும் பிரதமர் மோடி என்.சி.சி. மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். அதற்கு காரணம் நீங்கள் (என்.சி.சி.மாணவர்கள்) தான் நாட்டின் எதிர்காலம் என்பதை நன்கு அறிந்துள்ளார். இந்தியா வல்லரசு நாடாக உருவெடுத்து வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

துணைவேந்தர்கள் சந்திப்பு 

முன்னதாக மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் வரவேற்றார். மேஜர் சரவணன், கமாண்டர் சவுகான், கேப்டன்கள் அசோக்குமார், கவிதா உள்பட முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி. மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கவர்னர் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு உணவு அருந்திவிட்டு ஓய்வு எடுத்தார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தென்னிந்திய பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து பேசுகிறார்.
தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதியம் 2 மணி அளவில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். 


Next Story