லேத்பட்டறை உரிமையாளரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை


லேத்பட்டறை உரிமையாளரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 10 March 2022 10:40 PM IST (Updated: 10 March 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

லேத் பட்டறை உரிமையாளரை கழுத்தை நெரித்துக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோவை

லேத் பட்டறை உரிமையாளரை கழுத்தை நெரித்துக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

லேத் பட்டறை உரிமையாளர்

கோவை இருகூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது45). இவரும் சூலூரை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும், ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். பின்னர், முருகானந்தம் இருகூரில் தனியே நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதில், 2019-ல் ரூ.4 லட்சம் கொடுத்து சதீஷ்குமார் பங்குதாரராக இணைந்துள்ளார். 

முதலில் அந்த நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றும்படியும், பின்னர் பங்குதாரராக இணைத்துக்கொள்வதாகவும் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சதீஷ்குமார் அங்கு பணியாற்றி வந்துள்ளார். ஆனால் பங்குதாரராக சேர்க்காமலும், ஏற்கனவே அளித்த தொகையை திருப்பி தராமலும், சம்பளம் வழங்காமலும் முருகானந்தம் தட்டிக்கழித்து வந்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

இதனால், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்ட சதீஷ்குமார், அதே நிறுவனத்தில் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் (33) உதவியை கோரியுள்ளார். 

இந்த நிலையில்  2019 நவம்பர் 19-ந்தேதி சதீஷ்குமார், முருகானந்தம் ஆகிய இருவரும் மது அருந்திய பின்னர், முருகானந்தத்தை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சதீஷ்குமார், முருகானந்தத்தை தலையைணையை கொண்டு அழுத்தியும், படுக்கை விரிப்பால் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். கொலைக்கு உடந்தையாக சந்திரன் இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் சதீஷ்குமார், சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சதீஷ்குமார், சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை, தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story