பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்


பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 11 March 2022 7:06 PM IST (Updated: 11 March 2022 7:06 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொள்ளாச்சி

கோட்டூர் அருகே மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாகாளியம்மன் கோவில்

ஆனைமலை அருகே கோட்டூர் பழனியூர் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மேலும் தினமும் அம்மன் சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 9-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 10 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கும், மாலை 6 மணிக்கு பூவோடு எடுத்தும் வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று  மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பக்தர்கள் குண்டம் இறங்கினர்

இன்று காலை வரை குண்டம் பூ வளர்க்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் பூ வளர்த்தனர். இதையடுத்து பக்தர்கள் செவ்வரளி மாலை அணிந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். காலை 6 மணிக்கு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 

அதை தொடர்ந்து விரதம் இருந்த பெண் பக்தர்கள் தங்கள் கைகளால் குண்டத்தில் பூக்களை அள்ளி போட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள். நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தேர் உலா வருதல், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளைமறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story