பேரூர் அருகே சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் சாமியாரை காரில் கடத்தி சென்று ரூ.35 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


பேரூர் அருகே சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் சாமியாரை காரில் கடத்தி சென்று ரூ.35 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
x
தினத்தந்தி 11 March 2022 7:39 PM IST (Updated: 11 March 2022 7:39 PM IST)
t-max-icont-min-icon

பேரூர் அருகே சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் சாமியாரை காரில் கடத்தி சென்று ரூ.35 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


பேரூர்

பேரூர் அருகே சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் சாமியாரை காரில் கடத்தி சென்று ரூ.35 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய 5 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது

சாமியார்

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் பேரூர் அருகே தீத்திபாளை யம் - கள்ளுக்கடை பிரிவு சக்தி கார்டன் பகுதியில் வீடு வாங்கி குடியேறினார். இவருக்கு, பாக்கியலட்சுமி (வயது 39) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். 
சரவணன், ஈரோடு மாவட்டம், தாளவாடியில் மள்ளன்குழி ஆதீனம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். அங்கு அவர், யாகம் மற்றும் வேள்வி, பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி சாமியார் போல் செயல்பட்டு வருகிறார்.

விசாரிக்க அழைப்பு

சரவணன், தனது மனைவி, குழந்தையை பார்க்க பேரூர் அருகே உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அவர், கடந்த 8-ந் தேதி காலை 7 மணிக்கு தனது வீட்டுக்கு வெளியே நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வெள்ளைநிற கார் ஒன்று திடீரென்று வந்தது. அதில் இருந்து 5 பேர் இறங்கினர்.
அவர்கள், உங்கள் மீது பேரூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி சாமியார் சரவணனை அழைத்துள்ளனர். அதற்கு அவர், மறுப்பு தெரிவித்ததோடு, அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளார். 

துப்பாக்கி முனையில் மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென்று சரவணனின் செல்போனை பறித்தனர். பின்னர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி அவரின் வாயில் துணியை வைத்து அமுக்கி கை, கால்களை கட்டி போட்டனர். 

மேலும் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி சரவணனை காரில் தூக்கிப்போட்டு பழனி மலை அடிவாரத்தில் உள்ள சாரதா ஆசிரமத்திற்கு கடத்தி சென்றனர். 

பின்னர், அவரை சரமாரியாக தாக்கி கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.

 பின்னர் அந்த மர்ம நபர்கள், சரவணனின் மனைவி பாக்கியலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.1 கோடியே 10 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 100 பவுன் நகைகளை நாங்கள் சொல்லும் இடத்துக்கு வந்து தந்து விட்டு, உங்கள் கணவரை அழைத்து செல்லலாம். இல்லாவிட்டால் அவரை கொன்று விடுவோம் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்தனர்.

ரூ.35 லட்சம்

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி, தனது சகோதரருடன் மர்ம நபர்கள் கூறிய திருச்செங்கோடு பகுதிக்கு  காரில் சென்றார். ஆனால் மர்ம நபர்கள், வேறுவேறு இடங்களுக்கு வர சொல்லி அலைக்கழித்தனர்.

 இதையடுத்து 9-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு, சங்ககிரி மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு மணல் மேடு அருகே வருமாறு கூறினர். 


அங்கு சென்றதும் மர்ம நபர்களிடம் தன்னால் ரூ.35 லட்சம் தான் திரட்டமுடிந்தது என்று பாக்கியலட்சுமி கூறினார். 

அந்த பணத்தை மணல்மேட்டில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்லுமாறு மர்ம நபர்கள் செல்போனில் கூறியுள்ளனர்.

கொலைமிரட்டல்

அதன்படி ரூ.35 லட்சத்தை வைத்து விட்டு பாக்கியலட்சுமி சென்றார். அந்த பணத்தை எடுத்துக் கொண்ட மர்ம நபர்கள், உங்கள் கணவரை காரில் அனுப்பி வைத்து விட்டோம். 

ஆனால் இது பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால், உங்கள் குடும்பத்தினரை கொன்று விடுவோம் என்று பாக்கியலட்சுமிக்கு மிரட்டல் விடுத்தனர். 

இதற்கிடையே சரவணன் கோவைக்கு வந்து சேர்ந்தார். இதைத்தொடர்ந்து சரவணன், பாக்கியலட்சுமி ஆகிய 2 பேரும் பேரூர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் கொடுத்தனர். 

5 பேர் மீது வழக்கு

அதன்பேரில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விக்கி என்ற வெள்ளை விக்கி உள்பட 5 பேர் மீது கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

சாமியாரை கடத்திச் சென்று ரூ.35 லட்சம் பறித்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

அவர்கள் அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.சினிமா பாணியில், துப்பாக்கி முனையில் சாமியாரை காரில் கடத்தி சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story