தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை திருச்சி மெயின்ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று ஒருவர் தான் கையில் கொண்டு வந்த, டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பார்த்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
ஜாமீனில் வந்தார்
விசாரணையில், அவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி ராஜா ராமன் (வயது 41) என்று தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்த போது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உறவினருடன் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக கைது செய்யப்பட்டு இருந்த ராஜாராமன் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆனால் அதற்கான ஆணையை அவரது வக்கீல் அவரிடம் வழங்காததால் நீதிமன்றத்தில் கையெழுத்து போட முடியாமல் போனதாகவும், இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு தீக்குளிக்க முயன்றதும் தெரிந்தது.
கைது
இதையடுத்து தீக்குளிக்க முயன்றதாக ராஜாராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இருப்பினும் நீதிமன்ற வளாகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story