மளுக்கப்பாறையில் ரூ 69 லட்சத்தில் சோதனைச்சாவடி கட்டும் பணி தொடக்கம்


மளுக்கப்பாறையில் ரூ 69 லட்சத்தில் சோதனைச்சாவடி கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 12 March 2022 7:08 PM IST (Updated: 12 March 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

மளுக்கப்பாறையில் ரூ.69 லட்சத்தில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி கட்டும் பணி தொடங்கியது.

வால்பாறை

மளுக்கப்பாறையில் ரூ.69 லட்சத்தில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி கட்டும் பணி தொடங்கியது.

சோதனைச்சாவடி

தமிழக- கேரள எல்லை பகுதியில் இருமாநில வனத்துறையினரும் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கும் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் இருமாநில வனத்துறை சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை செய்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இருமாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கொரோனா தொற்று காரணமாக மாநில எல்லைகளை தாண்டி வரக்கூடிய வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் ஆகியோரை சோதனை செய்து 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதை இருமாநில சுகாதார துறையினரும் சோதனை செய்து வருகின்றனர்.

பணிகள் தொடக்கம்

இதேபோல் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் மளுக்கப்பாறை பகுதியில் அமைந்திருந்த வனத்துறையின் சோதனை சாவடி போதிய வசதிகள், நவீன தொழில் நுட்ப வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தது. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தது. இதனை தொடர்ந்து கேரள மாநில வனத்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு நபார்டு வங்கி நிதி ரூ.69 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் பழைய வனத்துறையின் சோதனை சாவடி அமைந்திருந்த இடத்தில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. 

கோரிக்கை

இதேபோல் வால்பாறை பகுதியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடிகள் ஆழியாறு, அட்டகட்டி, உருளிக்கல், சோலையாறு ஆகிய இடங்களில் உள்ளது. 
கேரள வனத்துறையினரைப் போல தமிழக வனத்துறையின் அனைத்து சோதனை சாவடிகளையும் ஒருங்கிணைந்த சோதனை சாவடிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story