சரோஜினி வரதப்பன் நூற்றாண்டு விழா
சென்னை மயிலாப்பூரில் நேற்று சரோஜினி வரதப்பன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
நூற்றாண்டு விழா
மறைந்த சமூக சேவகி சரோஜினி வரதப்பனின் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலாப்பூர் அகாடமி சார்பில் விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் கலந்து கொண்டார்.
விழாவில் பெண்கள் நல்வாழ்வுக்கு ஆற்றிய சேவைக்காக எழுத்தாளர் பத்மா வெங்கட்ராமனுக்கு, சரோஜினி வரதப்பன் நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது. கல்வியில் சேவையாற்றும் எம்.ஜி.ஆர். காதுகேளாதோர் பள்ளி நிர்வாகி டாக்டர் லதா ராஜேந்திரனுக்கு என்.சி.ராகவாச்சாரி நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது.
சிறந்த ஆளுமை
இந்த நிகழ்ச்சியில் ஜெயந்தி நடராஜன் பேசியதாவது:-
எனது தாத்தா பக்தவச்சலம் தமிழக முதல்-அமைச்சராக இருந்தவர், எனது தந்தை ‘பிளாஸ்டிக்’ அறுவை சிகிச்சை முன்னோடி. எனது பெரியம்மா சரோஜினி வரதப்பன் சமூக சேவையில் ஈடுபட்டவர். இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தது பெருமையாக உள்ளது. எனது பெரியம்மாவின் நூற்றாண்டு விழாவில் இருக்கும் இந்திய பெண்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தான் அவரின் நினைவு இல்லங்களாக கருதுகிறேன். சரோஜினி வரதப்பன் எப்போதும் சமூக சேவை செய்யும்போது ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.
அவர் கொடுத்த வார்த்தையை எவ்வளவு பெரிய மனிதருக்காகவும் மாற்றியதில்லை. அவர் அப்படி ஒரு ஆளுமையாக திகழ்ந்தார். இளம் வயதில் படிக்கவில்லையே என எண்ணாமல் தனது 80-வது வயதில் பி.எச்.டி. பட்டம் பெற்றார். சரோஜினி வரதப்பன் ஆசைபட்டதுபோல, இந்த நாடு அமைய தொடர்ந்து பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் பேசுகையில், ‘சரோஜினி வரதப்பன் தனி பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். பணக்காரர்கள் பலருக்கு தர்மம் செய்ய மனதில்லை. ஆனால் சரோஜினி வரதப்பன், சமஸ்கிருத கல்லூரிக்கு வழங்கிய நன்கொடை மூலம் அனைவரும் பல மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story